இந்திய டெக் ஊழியர்களுக்கு கட்டம் கட்டி பணிநீக்கம் செய்கிறதா ஆரக்கிள், மைக்ரோசாப்ட்..? என்ன நடக்குது?
ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் இந்திய கார்ப்ரேட் துறையில் பெரிய அளவில் எதிரொலிக்க துவங்கியுள்ளது. ஏஐ டேட்டா சென்டர் அமைப்பதிலும், அதை ஏஐ மாடல் நிறுவனங்களுக்கு அளிப்பதிலும் பெரிய அளவிலான வருமானத்தை பார்த்து வரும் ஆராக்கிள் ஏற்கனவே அறிவித்தது போல் மீண்டும் ஒரு பணிநீக்கத்தை செய்ய திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் சுமார் 30000 ஊழியர்கள் ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றும் வேளையில் இந்த 2வது சுற்று பணிநீக்கத்தில் 3000 ஊழியர்கள் தங்களுடைய பணியை இழக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரக்கிள் ஏஐ டேட்டா சென்டர் அமைப்பதற்காக பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து வரும் வேளையில் செலவுகளை குறைப்பது கட்டாயமாகியுள்ளதால் பணிநீக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
இதேவேளையில் மற்றொரு அமெரிக்க டெக் நிறுவனமான மைக்ரோசாப்ட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பொருட்டு சுமார் 500 ஊழியர்களை PIP எனப்படும் பர்பாமென்ஸ் இம்ப்பூருவ்மென்ட் பிளானில் போட்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் இந்தியா ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 2 சதவீதமாகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஏஐ துறையில் பல புதிய திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வரும் வேளையில் அதிகப்படியான முதலீடுகளை செய்து வருகிறது. பொதுவாக PIP என்பது ஒரு நிறுவனத்தில் சரியாக பணியாற்றாத ஊழியர்களின் திறனை மேம்படுத்தவும், நிர்வாகத்திற்கு ஏற்ற வகையில் அவர்களை பணியாற்ற வைக்க எடுக்கப்படும் முயற்சி தான்.
இந்த PIP காலத்தில் நிறுவனம் எதிர்பார்க்கும் திறனை காட்டினால் இயல்பு நிலைக்கு திரும்பலாம், இல்லையெனில் பணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதேபோல் PIPயில் இருக்கும் அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யப்படுமா என்பதும் கிடையாது. ஆனால் மைக்ரோசாப்ட் இலக்கு என்ன, இதற்காக இந்திய ஊழியர்களை அதிகளவில் கட்டம் கட்டுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2-3 வருடங்களாக விசா விவகாரம், ஏஐ தொழில்நுட்பம், புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகியிருக்கும் காரணத்தால் அமெரிக்க டெக் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகளவிலான ஊழியர்களை பணியில் சேர்த்து வந்தனர். ஆனால் தற்போது ஏஐ செலவுகளை கழுத்தை நெரிக்கும் காரணத்தால் இந்தியாவில் பணிநீக்கம் அதிகம் பணி நீக்கம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.
பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் உலக நாடுகளில் பணிநீக்கம் அதிகம் செய்தாலும், இந்தியாவில் குறைவான செலவில் திறன்வாய்ந்த ஊழியர்கள் கிடைக்கும் காரணத்தால் பணிநீக்கம் குறைவாகவே இருக்கும். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.
சமீபத்தில் அமெரிக்க பேமெண்ட் நிறுவனமான விசா கூட அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிட்ததக்கது.

