இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் நியமனம் தள்ளிப்போகலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். இவரது பதவிக்காலம் கடந்த உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடருடன் நிறைவு பெற்ற நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்காக நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வரும் 2-ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கிடையே தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ அறிவிப்பு செய்தது. மே 27 ஆம் தேதி வரை இந்த பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் உள்ளூர் முன்னாள் வீரர்களுடன் வெளிநாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அவற்றை தற்போது பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது. இதற்கிடையே கவுதம் காம்பீர் ஆலோசகராக செயல்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. கவுதம் கம்பீரின் அணுகுமுறை சிறப்பாக உள்ளதால் அவரையே பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று பல நிபுணர்கள் பிசிசிஐக்கு பரிந்துரை செய்ததாகவும், அதன் அடிப்படையில் அவரையே பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க – இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரின் சம்பளம் இத்தனை கோடியா? – விவரம் இதோ
தற்போதைய தகவலின் அடிப்படையில் தலைமை பயிற்சியாளர் அறிவிப்பு உடனடியாக வெளியாகாது என்று தெரிய வந்துள்ளது. தற்போது பிசிசிஐ உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெல்வதற்கு கவனம் செலுத்தும். இந்த தொடருக்கு பின்னர் இந்திய அணி இலங்கை மற்றும் ஜிம்பாப்வே நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது.
இந்த தொடரிலும் புதிய பயிற்சியாளர் பொறுப்பு ஏற்க மாட்டார் என்று தெரியவந்துள்ளது. இதன் பின்னரே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)