Last Updated:
2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மேட்ச்சில் 123 ரன்கள் எடுத்திருந்தார். அந்த மேட்ச்சில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
விராட் கோலி சதம் அடித்தும் நேற்று நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இவ்வாறு கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோற்பது என்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2,462 நாட்களுக்கு பிறகு நடந்திருக்கிறது.
இது குறித்த சுவாரசியத் தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரை தென்னாப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகின்றன.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. நேற்று ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். இருப்பினும் இரண்டாவது பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
விராட் கோலி சதம் அடித்தும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் முன்பு இதுபோன்று சில போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
நேற்றைய ஆட்டத்துடன் சேர்த்து மொத்தம் 8 போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி வெற்றியை பெறவில்லை. கோலி தனது ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் முதல் சதத்தை 2011 செப்டம்பர் 16ஆம் தேதி நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அடித்தார்.
December 04, 2025 4:39 PM IST


