மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்புகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதாக மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி தெரிவித்தார். இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் (ICCR) 77-வது ஆண்டு நிறைவு விழா, கோலாலம்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய கலாச்சார மையத்தின் (NSCBICC) 15-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி கோலாலம்பூரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய மலேசிய தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் கலாச்சாரப் பரிமாற்றங்களையும் பாராட்டிப் பேசினார். மலேசியாவின் பல்லினச் சமூகத்தில் இந்தியக் கலை, கலாச்சாரம் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்வதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பி.என்.ரெட்டி பேசினார். கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாச்சார மையம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்த 15 ஆண்டுகளில், மலேசிய மக்களிடையே இந்தியக் கலை, கலாச்சாரத்தை கொண்டு சேர்ப்பதில் இந்த மையம் பெரும் பங்காற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டார். தற்போது இந்த மையம் யோகா, இந்திய பாரம்பரிய நடனங்கள், இசை மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் ரீதியான உறவை மேலும் பலப்படுத்துகிறது. வரும் காலங்களில், மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகளை விரிவுபடுத்தவும், அதிகப்படியான கல்வி உதவித்தொகைகளை (ICCR Scholarships) மலேசிய மாணவர்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
கதக், பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இந்த விழாவில் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டி.எஸ். டாக்டர் கே. நகுலேந்திரன், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பி. சகாதேவன், துங்கு சைன் அல்-ஆபிதீன் இப்னி துங்கு முஹ்ரிஸ், சூத்ரா அறக்கட்டளைத் தலைவர் பத்மஸ்ரீ டத்தோ ரம்லி இப்ராஹிம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராமேஸ்வரி ராஜா






