அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை அமெரிக்கா உடனடியாக 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைத்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவு கடந்த ஓர் ஆண்டுகாலமாக சுமுகமானதாக அமையவில்லை. வரி விதிப்பு, வர்த்தக உறவு என பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன.
இந்த சூழலில் நேற்று திங்கள் கிழமை இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி உடன் ட்ரம்ப் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டிருந்தார். அதில்தான் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவு மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளார்.
இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி மற்றும் கூடுதல் வரி 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தது அமெரிக்கா. இந்நிலையில், தற்போது பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ட்ரம்பின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார். (a)

