கி.சீலதாஸ்
ஜுன் மாதம் 16-17ஆம் தேதிகளில் கனடாவில் ஜி7 (G7) என்கின்ற அமைப்பின் உச்சநிலை கூட்டம் நடைபெற்றது. இந்த ஜி7 குழுமம் 1975ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆறு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.
இதை ஃபிராஞ்சு, மேற்கு ஜெர்மன் (இப்பொழுது ஜெர்மனி), இத்தாலி, ஜப்பான், ஐக்கிய முடியரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நிறுவின. 1976ஆம் ஆண்டு அந்த அமைப்பில் கனடா இணைந்தது. 1977ஆம் ஆண்டு நடந்த அந்தக் குழுமத்தின் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டது.
அதிலிருந்து ஜி7 கூட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அதன் உறுப்பு நாடாகிவிட்டது. 1998ஆம் ஆண்டு ரஷ்யா இந்தக் குழுமத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இப்பொழுது அதன் உறுப்பியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு நாடுகள் மட்டும்தான் உறுப்பினர்களாக உள்ளன.
இது குறிப்பிடப்பட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் கூடி உலகப் பிரச்சினைகள், பொருளாதாரத்தின் உறுதிநிலை, பாதுகாப்பு, பன்மைத்துவம், மக்களாட்சி மற்றும் பிரதிநிதித்துவ அரசு ஆகியன குறித்து விவாதித்து முடிவெடுப்பதே இதன் நோக்கமும் நடவடிக்கைகளாகும். இதன் உறுப்பினர்கள் முதிர்ச்சி பெற்ற ஜனநாயக நாடுகள் எனச் சொல்லப்படுகிறது.
ஏழு நாடுகளின் தலைவர்கள்
இந்தக் குழுமம் ஆண்டுதோறும் தமது உச்சநிலை கூட்டத்தை நடத்தும். பல நாடுகளைக் கலந்து கொள்ளும்படி கூட்டத்தை நடத்தும் நாட்டின் பிரதமர் அல்லது அதிபர் அழைப்பது வழக்கம். 2001ஆம் ஆண்டிலிருந்து இந்தியா ஜி7 உச்சநிலை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கனடாவில் நடந்த ஜி7 கூட்டத்தில் கலந்து கொள்ளும் அழைப்பு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இதற்குக் காரணம் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டீன் த்ரோடோ இந்தியா மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைக்கும் நோக்கமுடைய சக்திகளுக்கு கனடா இடமளிக்கிறது என இந்தியா குற்றம் சாட்டியது.
இதனால் அவ்விரு நாடுகளுக்கு இடையே நிலவிய நீண்ட கால நட்பு பாதிப்புற்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் த்ரோடோவின் ஆட்சியை எதிர்த்து கனடியர்கள் செயல்படத் தொடங்கினர். அவரால் ஆட்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. பிரதமர் பதவியிலிருந்து விலகி கொண்டார். இதற்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமை ஏற்ற தாராண்மை கட்சி அபாரா வெற்றி பெற்றது.
அவர் பிரதமர் பதவி ஏற்றப் பிறகும் இந்தியா – கனடா உறவில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளில் உற்சாகம் குறைந்தே காணப்பட்டதாகக் கருதப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் பதவி ஏற்ற மார்க் கார்னிக்கு ஒரு சோதனைதான் ஜுன் மாதத்தில் நடந்த ஜி7 குழுமத்தின் உச்சநிலை கூட்டம்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தியா இந்தக் கூட்டங்களில் கலந்து கொள்ள அழைக்கப்படுவது உண்டு. கனடா-இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை த்ருடோவின் பிரதமர் காலத்தில் மோசமான நிலையை அடைந்துவிட்டதை உலகமே அறிந்த உண்மை.
இத்தகைய சூழ்நிலையில் பிரதமர் கார்னியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்று கணிப்பது சிரமமாக இருந்தது. கனடா மக்களின் மனநிலையைப் பார்க்கும் போது இந்தியாவுடனான பகைமை உணர்வை ஏற்க மறுப்பதைத்தான் காட்டுகிறது. நடந்து முடிந்த தேர்தல் அதை உணர்த்துவதாகவும் கூறப்பட்டது.
பிரதமர் கார்னியின் நிலை என்ன என்பதை ஜி7 கூட்டத்தின் தேதி நெருங்கும் போதுதான் தெரியும் என்றும் சொல்லப்பட்டது. கார்னி இந்த ஆண்டு மார்ச் மாதம் பதினான்காம் தேதி கனடாவின் பிரதமர் பதவி ஏற்றார்.
22 ஏப்ரம் 2025ஆம் தேதி இந்திய மாநிலமான காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 சாதாரண மக்கள் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர். இந்தப் பயங்கரவாத செயலைப் பாகிஸ்தான் பகுதியிலிருந்து வந்த பயங்கரவாதிகளின் அட்டூழியச் செயல் இது என இந்தியா குற்றம் சாட்டியது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவு தரக்கூடாது என்பது இந்தியாவின் நிலைபாடு எனச் சொல்லப்பட்டது.
பஹல்காம் துயரச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்த பயங்கரவாத கும்பல் பாகிஸ்தான் எல்லைகளில் இருந்து வந்தவர்கள் என்று இந்தியா கூறியது. 7 மே 2025ஆம் தேதி பயங்கரவாதிகளின் மூலமாகச் செயல்படும் இடங்களைக் குறிவைத்து இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதலை (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) மேற்கொண்டது. அதுதான் சிந்தூர் நடவடிக்கை. பாகிஸ்தானும் எதிர் நடவடிக்கையில் இறங்கியது.
10 மே 2025ஆம் தேதி சண்டையைத் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தச் சண்டை நிறுத்தத்திற்குத் தாம் தான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்தார். இதை இந்தியா மறுத்தது.
சண்டையை நிறுத்தும்படி கோரியது பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர். இந்த வேண்டுகோளை இந்திய இராணுவ நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியிடம் முன்வைக்கப்பட்டது. பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகள் தலைமை அதிகாரியின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தச் செய்தியை இந்தியத் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது. பாகிஸ்தான் இதைக் குறித்து எந்தச் செய்தியும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதற்குள் பாகிஸ்தான் அதை மீறிவிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியதோடு பலத்த எதிர் நடவடிக்கையும் மேற்கொண்டது.
இரு தரப்பினரின் தாக்குதல் பலத்த சேதங்கள் ஏற்படுத்தியதை ஒட்டி பாகிஸ்தான் மீண்டும் சண்டை நிறுத்தத்தைக் கோரியது. அதை இந்தியா ஏற்றுக்கொண்டது. இந்தச் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபரின் பங்கு என்ன? என்று கேட்கும்போது அமெரிக்காவின் பங்கு ஏதும் இல்லை என்பது இந்தியாவின் முடிவான, தெளிவான விளக்கம். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் தாம் தான் சண்டை நிறுத்தத்திற்குக் காரணம் எனக் கூறுகிறார். அதுமட்டுமல்ல, சமாதானத்திற்கு வழிகாட்டிய பெருமை தமக்குச் சாரும். எனவே, சமாதானத்திற்கான நோபெல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் எனச் சூசகமாகக் கூறுகிறார்.
இந்த இழுபறி காலத்தின் போது கனடாவின் ஜி7 குழுமத்தின் உச்சநிலை கூட்டம் நடக்கவிருந்தது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்டார்.
ஜி7 உச்சநிலை கூட்டம்
கனடாவில் நடந்த அந்த உச்சநிலை கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் இந்தியப் பிரதமரும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சந்திப்பதிற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையா? அல்லது அப்படிப்பட்ட சந்திப்பு தவிர்க்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், டிரம்ப்-மோடி இருவரும் நல்ல நண்பர்கள் என்ற கருத்து பலமாக இருந்ததை யாரும் மறுக்கவில்லை. அந்த நட்பில் சரிவு ஏற்படும் வகையில் இந்திய – பாகிஸ்தான் சண்டை நிறுத்த சர்ச்சை அமைந்துவிட்டது என்ற கருத்தும் பலமடைந்தது.
மோடிக்கு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்
ஜி7 உச்சநிலை கூட்டம் முடிவதற்கு முன்னரே டிரம்ப் தாயகம் திரும்பிவிட்டார். அந்தக் கூட்டம் முடிந்ததும் மோடி மற்ற நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்ட போது அமெரிக்கா, தலைநகருக்கு வந்து தம் விருந்தில் கலந்து கொள்ளும்படி மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார் அதிபர் டிரம்ப்.
தாம் முன்கூட்டியே சில நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்ள நிகழ்ச்சி தயாரித்துவிட்டதால் தம்மால் டிரம்பின் அழைப்பை ஏற்க முடியவில்லை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இதற்குப் பிறகு நடந்தது என்ன? அதே நாளில் பாகிஸ்தான் இராணுவத் தலைவர் அசீம் முனிர் டிரம்ப்பின் மதிய உணவுக்கு அழைக்கப்பட்டதாகச் செய்தியும் வெளிவந்தது.
அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகள் பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தலாம். இப்பொழுது அது முக்கியமல்ல. மாறாக, பிரதமர் மோடி அதிபர் டொனல்ட் டிரம்ப்பின் கட்டளைக்குக் கட்டுப்படுபவர் என்றதோடு தவறான பிரச்சாரத்தையும் அவரைப் பற்றி அநாகரிகமாகப் பேசுவதும் வழக்கமாகிவிட்டது.
அத்தகைய அவதூறுமிக்க குற்றச்சாட்டுக்கும் பேச்சுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாற் போல அமைந்திருக்கிறது பிரதமர் மோடியின் நடவடிக்கை.
அதாவது, டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்க மறுத்ததானது மோடி எளிதில் எவர்க்கும் அடிபணிந்து போகும் குணமுடையவர் அல்ல என்பது தெளிவாகிறது. மோடியின் இந்த நடவடிக்கை டிரம்புக்கு மட்டுமல்ல உலகுக்கே ஒரு பாடத்தை உணர்த்தும் தன்மையுடையது எனவும் சொல்லலாம். எவ்வளவு பலம் வாய்ந்தவராக இருப்பினும், மற்றவர்களின் மன உறுதியை, கவுரவத்தைக் குறைத்து மதிப்பிடுவதைத் தவிர்ப்பதே விவேகமான அரசியல். இதை டிரம்ப் இப்பொழுது உணர்ந்திருப்பார்.
பிரச்சினை தீர்ந்ததா? இல்லை. தமது முயற்சியால் தான் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது என்று சொல்வதை, கோருவதை டிரம்ப் கைவிடுவதாகத் தெரியவில்லை. அவர் சொல்வது உண்மையானால் அவர் கூறும் “சண்டை நிறுத்தம்” அமலாக்கப்படுவதற்கு முன்னரே சண்டை மீண்டும் தொடர்ந்துவிட்டது.
எனவே, சண்டைக்காரர்களை வணிகத்தால் ஏற்படும் நன்மையைக் கருதி சமாதானத்தைப் பேணுங்கள் என்று அவர் சொன்னாராம். இந்தியா – பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டு சண்டை நிறுத்தத்தை நிறுத்திக் கொண்டது என்கிறார். அவர் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லையே.
இப்பொழுது சண்டை நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், சமாதானம் இன்றளவும் வலிமையற்ற நிலையில்தானே இருக்கிறது. மீண்டும் சண்டை உயிர்பெறும் என்கின்ற அபாயம் நீங்கிவிடவில்லையே.
இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்குச் சமாதானத்தின் மீது கண். டிரம்புக்கு நோபெல் பரிசு மீது கண் என்பதோடு தமது குடும்பம் பாகிஸ்தானில் வணிகத் தொடர்பை வைத்திருக்கிறது. அதன் பாதுகாப்புதான் டிரம்புக்கு முக்கியம் எனவும் சொல்லப்படுகிறது.
ஜனநாயகத்தில் அர்த்தம்
இந்தியா ஜனநாயக நாடு. பாகிஸ்தான் இராணுவ கட்டுப்பாட்டில் இயங்கும் சர்வதிகார நாடு. ஜனநாயக அரசியல் அங்கு நீடிப்பது கடினம் என்பதை அந்நாட்டின் வரலாறு உணர்த்துகிறது.
உலகிலேயே பலம் வாய்ந்த வல்லரசாகத் திகழும் அமெரிக்காவுக்குப் பின்னடைவு ஏற்படக்கூடாது என்பதால் ஜனநாயக நாடுகளைத் தன் பக்கம் இழுப்பது அதன் கொள்கையாக இருக்கிறது. அமெரிக்காவுக்கு ஆதரவு தராவிட்டால், ஜனநாயக நாடு என்பதையும் பாராமல் பழிவாங்குவதும், தமக்கு ஏற்றவர்களை ஆட்சியில் அமர்த்துவது அமெரிக்காவின் அரசியல் கலாச்சாரம்.
ஜனநாயக நாடுகளைத் தற்காத்து பலமடையச் செய்வதில் கரிசனத்தை அமெரிக்கா கொண்டிருந்தால் தான் அதன் ஜனநாயகத்தில் அர்த்தம் இருக்கும். மற்ற ஜனநாயக நாடுகளும் நம்பும். அமெரிக்கா ஜனநாயகம் என்ற பெயரில் தமது வணிகத்தை வளப்படுத்துவதை மட்டும் குறியாகக் கொண்டு செயல்பட்டால், இறுதியில் அதுதான் அவலநிலைக்கு உந்தப்படும். அமெரிக்கா தனது நலனை மட்டும் நினைத்துச் செயல்பட்டு வெற்றி கண்ட காலம் நீடிக்கிறது. அது நீடிக்காது என்ற நிலை உறுதி பெறும் காலம் நெருங்கிவிட்டது என்பதை அமெரிக்கா உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இன்று சில நாடுகள் குறிப்பாக சீனா, இந்தியா ஆகியன அமெரிக்காவின் வல்லரசு முதலிடத்திற்குச் சவால்விடும் வகையில் உள்ளன. அமெரிக்காவின் அரசியல் வாழ்வு வயது 249 ஆண்டுகள். இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் அரசியல் பொருளாதார கலாச்சார வாழ்க்கை பல சோதனைகளுக்கு உட்பட்டு தலை நிமிர்ந்து நிற்கத் தொடங்கிவிட்டன.
அவற்றின் அரசியல் நாகரிகத்தின் வயது பல்லாயிரம் ஆண்டுகள். அவர்களின் அரசியல் அனுபவம் பழமையானது. வித்தியாசமானது. அமெரிக்காவும் மற்ற மேலை நாடுகளும் இந்த உண்மையைப் புரிந்து கொள்வது நல்லது.
வெறும் சூழ்ச்சி முறைகளால் , அரசியல் வாழ்வை நடத்த முடியும் என்கின்ற கொள்கை நீடிக்க வழியில்லை. அதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது அதிபரின் விருந்துக்கான அழைப்பைத் தரமான முறையில் ஏற்க மறுத்த இந்தியப் பிரதமரின் அணுகுமுறை அமெரிக்காவின் நட்புக்கு மதிப்பளித்த இந்தியா அதன் எல்லா கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ள மறுத்ததை உலகம் அறியும். அதை மறு உறுதி செய்யும் தரத்தைக் கொண்டிருக்கிறது பிரதமர் மோடியின் நாகரிகமான நடவடிக்கை.
ஜனநாயக நாடுகள் மீதான தப்பான அபிப்பராயத்தை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டிய காலம் இது. அதைத் துரிதமாகப் புரிந்து கொள்ள அமெரிக்கா தயாரா என்பதற்கு அதனிடம்தான் பதில் இருக்கிறது.