இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 651.51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த இறுதி வாரத்தில் மாத்திரம் 4.837 அமெரிக்க டொலர்களால் உயர்ந்த இந்திய அந்நிய செலாவணிக் கையிருப்பு 651.51 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாற்றில் இது புதியதொரு மைல்கல் சாதனை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆளுநர் சக்திகாந்த தாஸ் விடுத்துள்ள அறிக்கையில், மே 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்திற்கு முற்பட்ட வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 2.027 பில்லியன் டொலர்களால் குறைவடைந்து 646.673 பில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது. அதேநேரம் கடந்த மே மாதம் 10 ஆம் திகதி 648.87 பில்லியன் டொலர்களாக இருந்தது.
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் யூரோ, பவுண்ட்டு மற்றும் யென் போன்ற அமெரிக்க டொலர் அல்லாத வெளிநாட்டு நாணய சொத்துக்களும் அடங்கும். தங்கத்தின் கையிருப்பு 56.501 பில்லியன் டொலர்களாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

