Last Updated:
இனிவரக்கூடிய இரண்டு போட்டியிலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதில் ஆடும் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் 23ம் தேதி நாளை தொடங்குகிறது.
இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ஜிம் பயிற்சியில் ஈடுபட்டபோது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது.. இதனால் எஞ்சியுள்ள 2 போட்டிகளிலும் நிதிஷ் குமார் ரெட்டி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில் பயிற்சியின்போது காயமடைந்த அர்ஷ்தீப் சிங்கும் 4வது போட்டியில் விளையாட மாட்டார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதால், இருவருக்கும் மாற்றாக சிஎஸ்கே அணி வீரர் அன்ஷுல் கம்போஜ் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். இதனால் இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. 2 பந்துவீச்சாளர்கள் தற்போது விலகி உள்ளதால் நட்சத்திர வீரர் பும்ரா மான்செஸ்டர் டெஸ்டில் விளையாட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஆனால் போட்டி ஆரம்பிக்கும் இறுதி நாளில் தான் ஆடும் லெவனில் உள்ள மாற்றங்கள் தெரிய வரும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்பு பஞ்சம் இருக்காது.
இதற்கிடையே பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த சிராஜ் வேலைப்பளுவை நினைத்து கவலைப்பட்டதில்லை எனவும் தாய்நாட்டிற்காக அதிக போட்டிகளில் விளையாடுவதே தனது விருப்பம் எனவும் தெரிவித்தார். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவதே தனது நோக்கம் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய சிராஜ் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 4வது டெஸ்ட்டில் விளையாடுவார் எனவும் இருவரும் இணைந்து சிறப்பாக பந்துவீசுவோம் எனவும் உறுதியளித்தார். இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளநிலையில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. இனிவரக்கூடிய இரண்டு போட்டியிலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்றமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் / குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப் / பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ்.
July 22, 2025 4:45 PM IST


