Last Updated:
இந்தத் தொடரில் இந்திய அணியின் சீனியர் ஆட்டக்காரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவும் களமிறங்க உள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு 50 நாட்களுக்கு முன்னரே ரசிகர்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் தொடங்க உள்ளது.
3 போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது போட்டி அக்டோபர் 23ஆம் தேதியும், கடைசிப் போட்டி அக்டோபர் 25ஆம் தேதியும் நடைபெறுகின்றன.
அதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 29ஆம் தேதி ஆரம்பமாகிறது. அடுத்தடுத்த போட்டிகள் அக்டோபர் 31, நவம்பர் 2, நவம்பர் 6 மற்றும் நவம்பர் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளாக இருக்கும் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளதால் இந்தத் தொடர்கள் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான ரசிகர்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தப் போட்டித் தொடரை நடத்துவதில் தங்களுக்கான ஆர்வம் இன்னும் அதிகரித்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ரசிர்களின் ஆரவாரத்தால் விளையாட்டு அரங்கம் அதிரும் வகையில் இந்த ஒருநாள் தொடர் நடைபெறுவதை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
August 30, 2025 3:28 PM IST


