Last Updated:
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உதவிகள் சென்றடைவதில் கடும் தேக்கநிலையை உருவாக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்க, ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் மஷ்ஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த முன்னணி தனியார் விமான நிறுவனமான ‘மஹான் ஏர்’ நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று பலத்த சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானம் மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்காக ஏப்ரல் 1-ஆம் தேதி புது தில்லிக்கு வரவிருந்த நிலையில் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தியாவிலிருந்து சுமார் 11 டன் மருத்துவ உபகரணங்களை ஏற்றிச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மஷ்ஹத் விமான நிலையத்திலேயே இவ்விமானம் தாக்கப்பட்டது. நிவாரணப் பணிகளுக்காகப் புறப்படத் தயாராக இருந்த சூழலில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரானை மையமாகக் கொண்டு இயங்கும் மஹான் ஏர்லைன்ஸ், ஆசியா, ஐரோப்பாவின் முக்கிய நகரங்களுக்குத் தனது சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக, புது டெல்லி, குவாங்சோ ஆகிய நகரங்களுக்குத் தொடர்ச்சியான விமானங்களை இயக்கி வருகிறது.
மேற்காசியாவில் நிலவி வரும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் புது டெல்லியிலிருந்து தெஹ்ரானுக்குத் தேவையான மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய உதவிகள் சென்றடைவதில் கடும் தேக்கநிலையை உருவாக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து சர்வதேச நடுநிலை அமைப்புடைகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. தெளிவற்ற சூழலே நிலவுகிறது. இது குறித்த மேலதிகத் தரவுகள் வெளியான பின்னரே, இந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை முழுமையாகப் புலப்படும்.

