Last Updated:
ரஷ்யாவுடனான வர்த்தக பற்றாக்குறையை களையும் வகையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின் இடையே இன்று நடைபெறும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டெல்லியில் உள்ள இல்லத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு இரவு விருந்து அளித்து உபசரித்த பிரதமர் மோடி அவருக்கு பகவத் கீதையின் ரஷ்ய மொழி பதிப்பு நூலை பரிசளித்தார். அதன்பின் தான் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு அதிபர் புதின் புறப்பட்டுச் சென்றார்.
இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு செல்லும் புதின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.
அப்போது ராணுவம், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவுடனான வர்த்தக பற்றாக்குறையை களையும் வகையில் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக மருந்து, ஆட்டோமொபைல், வேளாண் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் இருந்து, எஸ்-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை கூடுதலாக கொள்முதல் செய்வது, SU-57 போர் விமானங்களை இந்தியாவிற்கு விநியோகிப்பது குறித்து பேசப்படலாம் என்று தெரிகிறது. உச்சி மாநாடு நிறைவடைந்த பின், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் புதின் கலந்து கொள்கிறார். அதன்பின், இரவு 9 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ செல்கிறார்.
December 05, 2025 6:56 AM IST


