Last Updated:
ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த ஜப்பான் நாட்டு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என அழைக்கப்படுகிறது. அங்குள்ள நேர்த்தியான கோட்டைகளை காண உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அதில், மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள ஜெய்கர் கோட்டையின் அழகை ரசிக்க நாள்தோறும் பல்வேறு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஜெய்கர் கோட்டைக்கு வந்துள்ளார்.
அங்கு தனியாக சென்ற போது உள்ளூர் இளைஞர்கள் சிலர் அவ்வழியாக வந்துள்ளனர். அவர்கள் தனியாக இருந்த பெண்ணை பார்த்ததும் சீண்டியுள்ளனர். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்களிடம் முறையிட்டுள்ளார்.
பின்னர், அவர்கள் அறிவுறுத்தியதன் படி அந்த பெண் காவல் நிலையத்தில் முறையாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், 5 இளைஞர்களின் அடையாளத்தை கண்டுபிடித்த போலீசார், அவர்களை கைது செய்யும் நோக்கில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அண்மையில் ஜெய்ப்பூரில் ஜல் மஹால் அருகே வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் செல்ஃபி எடுக்க உள்ளூர் இளைஞர்கள் போட்டி போட்டனர். அப்போது, அவர்கள் அந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஜப்பான் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அத்துமீறலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
Apr 07, 2026 10:15 PM IST


