ரஷ்யாவில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதாகவும், இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறுகிய காலத்தில் இந்தியா நிறுத்திவிடும் என பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடு என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வெளியுறவுத் துறை, நிலையற்ற எரிசக்தி சூழலில் இந்திய நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதே தங்களது முன்னுரிமையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. நுகர்வோரின் நலனை மையப்படுத்தியே தங்களது இறக்குமதி கொள்கை அமையும் எனவும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி கொள்முதலை விரிவுப்படுத்த முயன்று வருவதாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை, தற்போதைய அமெரிக்க நிர்வாகம் எரிசக்தி ஒத்துழைப்பை மேலும் விரிவுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்து, அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம், ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக டிரம்ப் கூறிய நிலையில், டிரம்பை பார்த்து பிரதமர் மோடி அச்சப்படுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என முடிவெடுக்கவும், அதை அறிவிக்கவும் டிரம்பை பிரதமர் மோடி அனுமதிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர் அவமதிப்புகளுக்கு மத்தியிலும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தது, நிதியமைச்சரின் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தது, காசா அமைதி மாநாட்டில் பங்கேற்காமல் தவிர்த்தது, ஆபரேஷன் சிந்தூர் குறித்த முரண்பாடான கருத்தை மறுக்காமல் இருப்பது என பட்டியலிட்ட ராகுல்காந்தி டிரம்பை பார்த்து பிரதமர் மோடி அச்சப்படுவதாக விமர்சித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். நமது வெளியுறவுக் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.
October 16, 2025 9:06 PM IST

