Last Updated:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 500% இறக்குமதி வரி விதிக்க மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இது இந்திய வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மீது 500 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்கக்கூடிய மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளது இந்திய வர்த்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்ற டிரம்ப், தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அதிரடியாக உயர்த்தி அறிவித்தார். ஜூலை 9ஆம் தேதிக்குப் பின்னர் இந்த புதிய வரிவிதிப்பு முறைகள் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் போர் விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
அதன்படி ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்துள்ள நாடுகளுக்கு அதிக வரி விதித்து ரஷ்யாவுடனான அந்நாடுகளின் வர்த்தக உறவை முறிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்க வழிவகை செய்யும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. எனினும் இது தொடர்பாக விளக்கமளித்து அமெரிக்க அதிபர், இந்தியாவுடன் வித்யாசமான வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா- ரஷ்யா இடையேயான மோதலில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பலிகடா ஆக்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிச் சலுகை மற்றும் செலவு குறைப்புக்கான மசோதா ஒரு வாக்கு வித்தியாசத்தில் செனட் சபையில் நிறைவேறியது. செனட் சபையில் மசோதா தாக்கலான போது குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் சம பங்கு வாக்களித்த நிலையில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் வாக்கின் மூலம், 51-க்கு 50 என்ற கணக்கில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா அமெரிக்க ராணுவத்துக்கான ஒதுக்கீடு மற்றும் அமெரிக்கர் அல்லாதோரை நாடு கடத்தும் திட்டத்துக்கான நிதியை சுமார் 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வழிவகை செய்கிறது. மேலும், அமெரிக்க அரசால் வழங்கப்பட்டு வந்த பல்வேறு திட்டங்களில் 385 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வரிச்சலுகை வழங்க மசோதா வழிவகை செய்கிறது. அதேநேரம், நாடு முழுவதும் 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார காப்பீடுகள் நிறுத்தப்பட உள்ளதாகவும், இதனால் 86 லட்சம் அமெரிக்கர்கள் சுகாதார பலன்களை இழக்க நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இயற்கை எரிசக்தி, மின்சார வாகனங்களுக்கான பல மில்லியன் டாலர் மானியங்களை நிறுத்தும் அம்சமும் மசோதாவில் உள்ளது. இந்த மசோதாவை நாளை மறுதினத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகள் சபையில் நாளை மறுதினம் விவாதத்துக்கு வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அடுத்த நாளே புதிய கட்சி தொடங்க உள்ளதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
July 02, 2025 11:28 AM IST