Last Updated:
ஒரு சாதாரண வேலை வாய்ப்பு கேள்வி, ஈரான் – இந்தியா இடையிலான உறவை சமூக வலைதளங்களில் ஒரு பேசுபொருளாக மாற்றியுள்ளது.
மும்பையில் உள்ள ஈரான் தூதரகத்திற்கும், இந்திய சமூக வலைதளப் பயனர் ஒருவருக்கும் இடையே நடந்த இந்த நெகிழ்ச்சியான உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அக்ஷய் ஆனந்த் என்ற எக்ஸ் தள பயனர், மும்பையில் உள்ள ஈரான் தூதரகத்தின் சமூக வலைதளக் குழுவில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு அந்தத் தூதரகம் அளித்த பதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது காலிப் பணியிடங்கள் இல்லை என்பதை ஈரான் தூதரகம் மறைமுகமாக விளக்கியது. “தற்போது எங்கள் குழுவில் ஈரானியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், எங்களுக்கு இந்தியா மீது தனிப்பாசம் (Soft spot for India) உண்டு. எதிர்காலத்தில் எங்கள் இந்திய நண்பர்களைப் பணியில் சேர்த்துக் கொள்வது ஒரு சிறந்த யோசனையாக இருக்கும்,” என்று ஈரான் தூதரகத்தினர் பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிலின் எளிமையும், அதில் இருந்த நட்புணர்வையும் கண்டு இணையவாசிகள் வியந்து பாராட்டி வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஆழமான கலாச்சார மற்றும் நட்புறவை இந்தப் பதில் வெளிப்படுத்துவதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சிலர் தங்களின் பன்மொழித் திறமையைக் குறிப்பிட்டு, அங்கு வேலை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒரு தரப்பினர் இது வெறும் ‘மார்க்கெட்டிங்’ தந்திரம் என்றும், ஈரானின் அரசியல் நிலைப்பாடுகளை மறைப்பதற்கான முயற்சி என்றும் விமர்சித்துள்ளனர்.
பொதுவாகத் தூதரகங்கள் மிகக் கடுமையான மற்றும் அதிகாரப்பூர்வமான மொழியையே பயன்படுத்தும். ஆனால், ஈரான் தூதரகத்தின் இந்த அணுகுமுறை “டிஜிட்டல் டிப்ளமசி” எனப்படும் நவீன காலத் தூதரக உறவுகளில் ஒரு மாற்றத்தைக் காட்டுகிறது.
“இந்தியா மீது எங்களுக்கு தனிப்பாசம்!” – வேலை கேட்ட இந்தியருக்கு ஈரான் தூதரகம் அளித்த நெகிழ்ச்சியான பதில்..


