Last Updated:
அமெரிக்கா இந்தியா மீதான 25% வரி விதிப்பை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி உயர்வு அமலுக்கு வரும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பொருட்கள் மீதான 25 சதவிகித வரி விதிப்பு வரும் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் மீது ஆகஸ்ட் 1ஆம் தேதியான வெள்ளிக்கிழமை முதல், 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி வசூலிப்பதாகக் குற்றம்சாட்டினார். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பணமற்ற வர்த்தகத் தடைகளை இந்தியா கொண்டிருப்பதாகவும் சாடினார்.
ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் வாங்கி வருவதாகவும், உக்ரைனில் போரை நிறுத்த முயலும் உலக அணுகுமுறைக்கு எதிராக ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயையும் இந்தியா பெறுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இதன்காரணமாக ஆகஸ்ட் ஒன்று முதல் இந்திய பொருட்களுக்கு 25 விழுக்காடு இறக்குமதி வரி மற்றும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வரி விதிப்பு உயர்வு ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தேதி ஒத்திவைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள வெள்ளை மாளிகை, அந்நாட்டு சுங்கத்துறை புதிய வரியை வசூலிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு விதிக்கப்பட்ட வரியை டிரம்ப் குறைத்துள்ளார். அதாவது, பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட 29 விழுக்காடு வரி, 19 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, 35 விழுக்காடு வரி விதிக்கப்பட்ட வங்கதேசத்திற்கு, தற்போது 20 சதவிகிதமாக வரியை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
August 01, 2025 4:47 PM IST