Last Updated:
இஸ்ரேல்-ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் சண்டையை தான் நிறுத்தியதை போல், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலையும் முடிவுக்கு கொண்டு வருவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை, யாரும் எதிர்பார்க்காத வகையில், ஈரானின் அணு ஆயுத நிலையங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் பாதுகாப்பு படை தளபதி, அணு விஞ்ஞானிகள் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது அலை அலையாக ஏவுகணைகளை வீசியது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் 4-ஆவது நாளாக இரவு பகல் பாராமல் வான் தாக்குதலை நடத்தி வருகின்றன. ஆபரேஷன் ரைசிங் லையன், ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 இஸ்ரேல் மற்றும் ஈரான் மாறி மாறித் தாக்குதல் நடத்தும் ஆபரேஷன்களுக்கு இந்த பெயர்களை வைத்துக்கொண்டன.
இந்நிலையில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கவசமான அயன் டோமை கடந்துசென்று, ஈரான் நடத்தும் தாக்குதல்களால் இஸ்ரேலின் பல நகரங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. இஸ்ரேலின் அவசர கால சேவை மையான மேகன் டேவிட் அடோம், தலைநகர் டெல் அவிவ் அருகே உள்ள பேட் ஏம் நகரில் ஈரான் குண்டு மழை பொழிந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் ஆகிய இடங்களில் நேற்று பகல் பொழுதிலேயே சைரன்கள் ஒலித்தபடி இருந்தன.
ஈரான் நடத்திய தாக்குதலில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஈரான் மீதும் இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலில் இருந்து சுமார் இரண்டாயிரத்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரானின் மஸ்சாத் விமானநிலையத்தில் இருந்த விமானம் மீது தாக்குதல் நடத்தியது. இதனை கண்டு அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர். ஈரான் தலைநகர் டெஹ்ரான் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பகலிலும் குண்டு சத்தங்கள் கேட்டன. பல கட்டடங்கள் உருக்குலைந்தன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 128 பேர் கொல்லப்பட்டதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், சண்டையை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். சண்டை நிறுத்தம் தீர்வு அல்ல என்று சுட்டிக்காட்டிய நெதன்யாகு, அணு ஆயுத தயாரிப்பை ஈரான் கைவிட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றார். இத்தகைய சூழலில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் நிறுத்தியதை போன்று, இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்துவேன் என குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பிலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறிய டிரம்ப், விரைவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகில் பல நாடுகளுக்கு இடையே நடைபெறும் பிரச்னைக்கு தான் தீர்வு கண்டு வரும் நிலையில், அதற்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் டிரம்ப் புலம்பியுள்ளார். இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், மீண்டும் மீண்டும், தானே காரணம் என டிரம்ப் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
June 16, 2025 10:03 AM IST
“இந்தியா – பாக் சண்டையைப் போல் இஸ்ரேல் – ஈரான் மோதலையும் நிறுத்துவேன்” – அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்!


