Last Updated:
இந்தியா, பாகிஸ்தான் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இடையே இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் போர் பதற்றம் நிலவியது. இந்திய ராணுவத்தின் பதிலடியில் நிலைகுலைந்த பாகிஸ்தான், சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இதனால், இரு நாட்டு எல்லையோரத்தில் அமைதி திரும்பியது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இடையே இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை மாலை 5.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தற்போது, இந்தப் பேச்சுவார்த்தை நடந்து நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தையில், சண்டை நிறுத்த நடவடிக்கையை உறுதி செய்யும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்று பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த முப்படை அதிகாரிகள் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர், கூறியதாவது; “பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்றது. தீவிரவாதிகளின் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்சனையாக மாற்றுகிறது. இந்தியாவின் போர் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள், அவர்களின் கட்டமைப்புக்கு எதிரானது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் போக்கை மாற்றி வருகிறது. போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறினால், அதற்கு பதிலடி கொடுப்பது இந்தியாவின் கடமை.
பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்க பல அடுக்கு பாதுகாப்புகள் உள்ளன. இந்தியாவின் பழைய ராணுவ தளவாடங்கள் கூட தாக்குதலின்போது மிகச் சிறப்பாக செயல்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் இந்தியாவிற்கு சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக விளங்குகிறது. இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியாவுக்கு குறைந்த அளவே பாதிப்பு.
சீனாவின் ஏவுகணைகளை தான் இதுவரை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. ஆனால், தற்போது சீனாவில் உருவாக்கப்பட்ட டிரோன்களையும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை பாகங்கள் நம்மிடம் உள்ளன. அவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர்.


