பட மூலாதாரம், AP
இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ராணுவம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவிக்கும் லட்சக் கணக்கான மக்களை மீட்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளதால் அந்நாட்டின் பஞ்சாம் மாகாணம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. ஸ்ரீநகர்வாசிகள் பலர், தங்களின் வீடுகளின் கூரைகளுக்கு மேலே நின்று மீட்பு படையினருக்காகக் காத்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாகிஸ்தான் மற்றும் இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் ஆகிய இரு பகுதிகளில் குறைந்தது 280 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் இராணுவம் மற்றும் விமான படையினர் இரவு முழுவதும் ஈடுபட்டுவருவதாக இந்தியக் காஷ்மீர் பகுதியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தின் சக்தியால் கட்டிடங்கள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்து, தொலை தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்தை “ஒரு தேசிய பேரழிவு” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவரித்துள்ளார்.
வெளியேற கட்டளைகள்
பாகிஸ்தானில் மக்கள் பரந்த எண்ணிக்கையில் இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. விவசாய நிலங்களின் பெரும் பகுதிகளும் வெள்ளத்தால் அழிக்கப்பட்டுள்ளன.
செனாப் நதி திடீரென்று உயர்ந்ததில் ஏற்பட்ட பெரிய வெள்ளத்தால் குஜ்ரன்வாலா மற்றும் சியால்கோட் பகுதிகளில் உள்ள 600 கிராமங்களில் இருந்த வீடுகள் மற்றும் கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன.
பஞ்சாப் மாகாணத்தின் மையப்பகுதியில் உள்ள நதி நீர்பாயும் சமவெளிகளில் வாழும் மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் தென் பகுதியான சிந்து மாகாணத்தில் அடுத்த வாரம் மழை மற்றும் வெள்ளம் பரவக்கூடும் என்ற அச்சங்கள் உள்ளன.