`இந்தியா தாக்குதல் நடத்தினால் அல்லது சிந்து நதி நீரோட்டத்தைச் சீர்குலைத்தால் அணு ஆயுதம் உள்பட முழு அளவிலான பலத்துடன் பாகிஸ்தான் பதிலளிக்கும்’ என்று ரஷியாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி தெரிவித்துள்ளார்.
ரஷியாவின் அரசு ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலளிக்க பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதம் உள்பட எங்களின் முழு அளவிலான பலத்தை நாங்கள் பயன்படுத்துவோம்.
சிந்து நதி நீரோட்டத்தைத் திசைதிருப்பும் அல்லது தடுக்கும் எந்தவொரு முயற்சியும் பாகிஸ்தானுக்கு எதிரான போர் நடவடிக்கையாக கருதப்பட்டு, பதிலடி கொடுக்கப்படும். அதேநேரம், இரு நாடுகளும் அணு சக்திகளாக இருப்பதால், பதற்றத்தைத் தணிக்க வேண்டிய அவசியம் நிறைய உள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்த நடுநிலையான விசாரணையில் இணைய பாகிஸ்தான் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகமும் இதில் முக்கியப் பங்கு கொண்டுள்ளது. சீனா, ரஷியா போன்ற உலக நாடுகள் இந்த விசாரணையில் பங்கேற்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ஜம்மு-காஷ்மீர் பிரச்னைக்கான மூலகாரணம் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை. இது சர்வதேச சமூகத்தால் பல்வேறு தீர்மானங்கள் மூலம் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் நிலையான மற்றும் நீடித்த அமைதிக்காக இது கவனிக்கப்பட்ட வேண்டும் என்றார்.

