இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்தகான ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைத் தாண்டி வந்த சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனா். சீன வீரா்கள் எத்தனை பேர் உயிரிழந்தனா் என்ற சரியான தகவலை இதுவரையில் சீனா வெளியிடவில்லை.
இந்த மோதலை தொடா்ந்து கிழக்கு லடாக் எல்லையில் இருநாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களை குவித்ததால் கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வந்தது.
இந்த நிலையில், அக்டோபா் 23-ஆம் தேதி ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறவும், அங்கு ரோந்து பணிகளை மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒப்புதல் அளித்தனா். இரு நாடுகளுக்கிடையே இது குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
இதன்படி டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து மட்டுமே இருநாட்டு படைகளை விலக்கிக்கொள்ள அந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், எஞ்சிய பகுதிகளில் படை விலக்கல் மற்றும் ரோந்து பணிகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், ‘ஒப்பந்தத்தின்படி டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த வாரம் தொடங்கியது. படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது. அவ்விரு பகுதிகளில் விரைவில் ரோந்துப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. ரோந்து நடைமுறைகள் தொடா்பாக களத் தளபதிகள் முடிவு செய்வார்கள் என இந்திய ராணுவ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தது.
இந்த சூழ்நிலை தீபாவளி பண்டிகையையொட்டி இருதரப்பும் வியாழக்கிழமை இனிப்புகளை பரிமாறிக்கொண்டன.
இந்த நிலையில், இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் தெளிவாக வரையறுக்கப்படாத எல்லைக் கோட்டை (எல்ஏசி) ஒட்டிய பகுதிகளில் நீடித்து வந்த பிரச்னைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்தகான ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நாட்டின் முதலாவது துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேச ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
மோசமான வானிலை காரணமாக தவாங்கிற்கு செல்லமுடியாத நிலையில், சர்தார் வல்லபாய் படேல் சிலை மற்றும் மேஜர் ராலெங்னாவ் ‘பாப்’ காதிங் ‘வீரம் அருங்காட்சியகம்’ ஆகியவற்றை காணொலி மூலம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

