Last Updated:
டெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த திருச்சி சிவா இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் விவகாரத்திற்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அவர் பதில் அளித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் 21ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலை அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், போட்டி இருந்தால், அடுத்த மாதம் 9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர மாநில ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளார். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
வேட்புமனுத் தாக்கல் நிறைவடைவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தின. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலையும் இந்தியா கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதற்கிடையில், இந்தியா கூட்டணியின் சார்பில், குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக திமுக எம்.பி. திருச்சி சிவா அறிவிக்க வாய்ப்பு என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், டெல்லியில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த திருச்சி சிவா இந்த விவகாரத்திற்கு பதில் அளித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அது எனக்கு தெரியாது. தலைவர்கள் முடிவு செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
August 18, 2025 5:15 PM IST
இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் இவர்தானா? – பதில் அளித்த திருச்சி சிவா எம்.பி.


