பெங்களூரு: இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. லெசெகோ செனோக்வானே ரன் ஏதும் எடுக்காத நிலையில் அன்ஷுல் கம்போஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஜூபைர் ஹம்சா, ஜோர்டான் ஹெர்மானுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்.
இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். 2-வது விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை குர்னூர் பிரார் பிரித்தார். ஜூபைர் ஹம்சா 66 ரன்களில் குர்னூர் பிரார் பந்தில் ரிஷப் பந்த்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் மார்க்கியூஸ் ஆக்கர்மன் 18 ரன்களிலும், சிறப்பாக விளையாடி வந்த ஜோர்டான் ஹெர்மன் 71 ரன்களிலும் தனுஷ் கோட்டியன் சுழற்பந்தில் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக விளையாடிய ரூபின் ஹர்மான் 54 ரன்கள் எடுத்த நிலையில் தனுஷ் கோட்டியன் பந்தில் போல்டானார். ரிவால்டோ மூன்சாமி 5, தியான் வான் வூரன் 46, பிரேனலன் சுப்ராயன் 1, லுதோ சிபாம்லா 6 ரன்களில் நடையை கட்டினர். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 85.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது.
ட்ஷெபோ மோரேகி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ‘ஏ’ அணி தரப்பில் தனுஷ் கோட்டியன் 4, மானவ் சுதார் 2 விக்கெட்களை வீழ்த்தினர். கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்னூர் பிரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

