Last Updated:
“அமெரிக்க நிறுவனங்களால் இந்தியாவில் வர்த்தகம் செய்யமுடியவில்லை. இது ஒருதலைப்பட்சமான பேரழிவு” என அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இப்போது இந்தியா மிகக் குறைந்த அளவில் வரிக்குறைப்பை செய்துள்ளது. ஆனால் இது மிகவும் தாமதமான முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பொருள்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தார். பின்னர் வரி விதிப்பை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்த நிலையில், அமெரிக்கா-இந்தியா இடையே 5 கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார். மேலும் கடந்த 7 ஆம் தேதி முதல் இந்தியப் பொருள்கள் மீதான 25 சதவிகித வரி அமலுக்கு வந்தது. அது மட்டுமின்றி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இந்தியாவிற்கு அபராதமாக, கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி இந்தியாவுக்கு அமெரிக்கா விதித்த 50% வரி அமலுக்கு வந்தது. இதனால், அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுவது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இதில், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியுள்ளார். குறிப்பாக இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் எனும் ரீதியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா இந்தியாவுடன் குறைந்த அளவிலான வர்த்தகத்தையே மேற்கொள்கிறது. இதனை மிகச் சிலர் தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் இந்தியா, அமெரிக்காவுடன் பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறது.
US President Donald Trump posts on Truth Social, says, “What few people understand is that we do very little business with India, but they do a tremendous amount of business with us. In other words, they sell us massive amounts of goods, their biggest “client,” but we sell them… pic.twitter.com/CmD7j4jSdM
— ANI (@ANI) September 1, 2025
இந்தியாவுக்கு அமெரிக்கா மிகப் பெரிய சந்தை. இதுவரை இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான உறவாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி விதித்திருந்தது. இதனால், அமெரிக்க நிறுவனங்களால் இந்தியாவில் வர்த்தகம் செய்யமுடியவில்லை. இது ஒருதலைப்பட்சமான பேரழிவு.
இந்தியா அதிகப்படியாக தனது எண்ணெய் மற்றும் ராணுவத் தயாரிப்புகளை ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்கிறது. இப்போது இந்தியா மிகக் குறைந்த அளவில் வரிக்குறைப்பை செய்துள்ளது. ஆனால் இது மிகவும் தாமதமான முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.
September 01, 2025 9:23 PM IST
“இந்தியா உடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு” – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்


