Last Updated:
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் தொலைபேசியில் உரையாடினார்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்குத் தயாராக இருப்பதாக ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதியளித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸிடம் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இந்தியா – பாகிஸ்தானிடையேயான விவகாரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். பஹல்காம் தாக்குதல் தொடர்பான சுதந்திரமான வெளிப்படையான, நம்பகமான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
அதேநேரம் தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை இந்தியா வழங்கவில்லை என்றும் தொடர்ந்து ஆத்திரமூட்டும் செயலில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் ஷெபாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டியுள்ளார். பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதற்காக சர்வதேச நிதி நிறுவனங்களை அரசியலாக்க இந்தியா முயற்சி செய்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தனது முயற்சிகள் குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு எடுத்துரைத்த ஐ.நா. பொதுச்செயலாளர், இந்த விவகாரத்தில் இரு நாடுகளிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கடுமையாக கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் பற்றி விவாதிக்கப்பட்டது
ஏவுகணைகள் பரிசோதித்து வரும் பாகிஸ்தானை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவுடனான போர்ப்பதற்ற சூழலை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்க்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் அறிவுறுத்தினர். பஹல்காம் தாக்குதல் தொடர்பான நெருக்கடி சூழலை சர்வதேச அளவிலான பிரச்சனையாக பாகிஸ்தான் முயன்றதாகவும் புகார் எழுந்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த பிரச்சனைகள் குறித்து விவாதம் மட்டுமே நடந்த நிலையில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்தியாவுடன் போர் பதற்றம்.. ஐ.நா. பொதுச் செயலாளரிடம் பாகிஸ்தான் பிரதமர் சொன்ன முக்கிய தகவல்!


