[ad_1]
Last Updated:
நேபாள கலவரத்தில் சிறையில் இருந்து தப்பிய கைதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர்.
நேபாள சிறையில் இருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 60 கைதிகளை எஸ்எஸ்பி பாதுகாப்புப் படையினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் போராட்டம் நடைபெற்றது. முதலில் சமூக ஊடகங்களுக்கு எதிரான போராட்டம் என்று சொன்னாலும் கூட உண்மையில் அங்கு ஊழலுக்கு எதிராகவே போராட்டம் நடந்தது என பின்னர் செய்திகள் வெளியாகின.
ஊழலுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், கலவரமாக மாறியது. இந்தப் போராட்டத்தை கலைக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், கலவரக்காரர்கள் நாடாளுமன்றம், பிரதமரின் வீடு, அமைச்சர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு தீவைத்து கொளுத்தினர்.
இந்தக் கலவரத்தில் அங்கிருந்த சிறைகளும் தகர்க்கப்பட்டன. இதனால், சிறையில் இருந்த கைதிகளும் தப்பினர். முன்னதாக நேபாளத்தில் கலவரம் ஏற்பட்டதுமே இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியை பாதுகாப்புப் படை தீவிரமாக்கியது.
இந்தநிலையில், நேபாளச் சிறையில் இருந்து தப்பிய கைதிகள் உத்தரபிரதேசம், பிகார், மேற்கு வங்கம் எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்கு நுழைய முயல்கின்றனர். அப்படி நுழைய முயன்ற 60 கைதிகளை சகஸ்த்ர சீமா பால் என்ற துணை ராணுவப் படையினர் பிடித்து உள்ளூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
September 11, 2025 4:24 PM IST