போர்ட் லூயிஸ்: இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசித்து வரும் இந்திய மக்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை அன்று உரையாடினார்.
“இந்தியா எப்போதும் மொரீஷியஸ் உடன் நிற்கிறது. கடந்த 2021-ல் இந்தியாவின் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் (CEPA) கையெழுத்திட்ட முதல் ஆப்பிரிக்க ஒன்றிய நாடக மொரீஷியஸ் உள்ளது. பல்வேறு இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல் பகுதியைப் பாதுகாக்க மொரீஷியஸ் உடன் இந்தியா இணைந்து செயல்படுகிறது.
பல்வேறு கலாச்சாரங்கள் அடங்கிய தோட்டமாக மொரீஷியஸ் திகழ்கிறது. இங்கு ஒரு ‘மினி இந்தியா’ வாழ்கிறது. கல்வியில் பல்வேறு நாடுகள் பின்தங்கிய காலகட்டத்தில் பிஹாரில் நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது. அதை மீட்கும் பணியை எங்கள் அரசு செய்துள்ளது. புத்தரின் போதனைகள் உலக அமைதியை ஊக்குவிக்கிறது. விரைவில் உலக நாடுகளின் சிற்றுண்டி மெனுவில் மக்கானா இடம்பெறும்.
அண்மையில் நடந்து முடிந்த மகா கும்பமேளா நிகழ்வில் மொரீஷியஸ் நாட்டில் வசித்து வரும் குடும்பங்கள் பங்கேற்றன. இருப்பினும் பெரும்பாலான மொரீஷியஸ் வாழ் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. அதனால் திரிவேணி சங்கமத்தில் இருந்து நான் புனித நீரை கொண்டு வந்துள்ளேன்.
200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய விடுதலை போராட்ட வீரர்களை வஞ்சகர்கள் இங்கு கொண்டுவந்து துன்புறுத்தினர். அவர்களுக்கு அந்த நேரத்தில் பலம் தந்தது பகவான் ராமர் தான். கடந்த 1998-ல் இங்கு நடைபெற்ற சர்வதேச ராமாயண மாநாட்டுக்கு நான் வந்திருந்தேன். அப்போது நான் கண்ட நம்பிக்கையை இப்போதும் உணர முடிகிறது. கடந்த ஆண்டு அயோத்தியில் பகவான் ராமரை பிரதிஷ்டை செய்த போது இதே உணர்வுகளை பார்க்க முடிந்தது. அந்த நாளில் அரை நாள் விடுமுறை அறிவித்தது மொரீஷியஸ் அரசு. அந்த நம்பிக்கையின் பிணைப்புதான் இந்தியாவுக்கும் மொரீஷியஸுக்கும் இடையிலான நட்பின் அடித்தளம். கரோனா பாதிப்பின் போது மொரீஷியஸ் நாட்டுக்கு முதல் நாடாக தடுப்பு மருந்தை அனுப்பியது இந்தியா தான். மொரீஷியஸ் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.