வாஷிங்டன்: உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்திய பொருட்களுக்கான 25 சதவீத வரி விதிப்பு மாற்றமின்றி நீடிக்கும் நிலையில், பாகிஸ்தானுக்கான வரியை 10 சதவீதம் குறைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றார். அப்போது, ‘‘அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்த அளவுக்கு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதில் வரி விதிக்கும்’’ என்று அறிவித்தார். இந்தியாவுக்கு முதலில் 26 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பிறகு, அமெரிக்காவின் விடுதலை நாளை முன்னிட்டு அந்த வரி 1 சதவீதம் குறைக்கப்பட்டு 25 சத வீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வரி விதிப்பை தவிர்க்கும் வகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள ஜூலை 9-ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. பின்னர், இந்த அவகாசம் ஆகஸ்ட் 1-ம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கடந்த 31-ம் தேதி கையெழுத்திட்டுள்ளார். இதில், சிரியாவுக்கு அதிகபட்சமாக 41 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 14 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு இது அதிக வரி விதிப்பாகும். அடுத்ததாக, லாவோஸ், மியான்மருக்கு 40 சதவீதம், சுவிட்சர்லாந்துக்கு 39 சதவீதம், இராக், செர்பியாவுக்கு 35 சதவீதவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான வரி குறைப்பு: இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் விதமாக, அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசத்துக்கான வரி விதிப்பை முறையே 10 சதவீதம், 17 சதவீதம் குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்த பாகிஸ்தானுக்கான வரி 29 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும், வங்கதேசத்துக்கான வரி 37 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாகவும், இந்தோனேசியாவுக்கான வரி 32 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, கம்போடியாவுக்கான வரி 49 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம், ஐரோப்பிய யூனியனின் பெரும்பாலான பொருட்களுக்கான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம், ஜப்பானுக்கு 24 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம், மலேசியாவுக்கு 24 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம், தாய்லாந்துக்கு 36 சதவீதத்தில் இருந்து 19 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருட்களுக்கு 25% வரி: அதேநேரம், இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரி விகிதம் 25 சதவீதம் என்பது மாற்றமின்றி நீடிக்கிறது. இந்தியா உடனான வர்த்தக மோதல் ஒரே இரவில் தீர்க்கப்பட வாய்ப்பு இல்லை. இதற்கு நுட்பமான ராஜதந்திர நடவடிக்கைகள் தேவை என்று அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, இந்தியா உடனான பேச்சுவார்த்தைகள் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதிபர் டிரம்ப் மற்றும் ஒட்டுமொத்த வர்த்தக குழுவும் இந்தியா மீது சற்று அதிருப்தியில் உள்ளதாக அமெரிக்க நிதித் துறை செயலர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார்.
புதிய வரி விதிப்பு தொடர்பான நிர்வாக உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கடந்த 31-ம் தேதி கையெழுத்திட்டுள்ளார். ஆனாலும், இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 7-ம் தேதி முதல்தான் அமலுக்கு வர உள்ளது. இதனால், அமெரிக்க இறக்குமதியாளர்கள் அதற்குள் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும், சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு கட்டமைப்புகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் போதுமான அவகாசம் கிடைக்கும் என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.