Last Updated:
சந்திரபாபு நாயுடு, ரூ. 500 நோட்டுகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக அறிவித்தார். அதன்படி அன்று நள்ளிரவு முதல் பழைய ரூ. 500 மற்றும் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 1,000 மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என அறிவித்தார்.
இதனை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், அதனை மாற்றுவதற்கும் புதிதாய் அறிமுகம் செய்யப்பட்ட ரூ. 500 மற்றும் ரூ. 2,000 தாள்கள் மக்களிடம் வந்து சேர்ந்து புழக்கத்தில் வருவதற்குள்ளும் மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்தனர்.
ஒருவழியாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை முடிவடைந்து, புது பணத் தாள்கள் கைக்கு வந்துச் சேர்ந்து மக்கள் செலவழிக்க துவங்கிய சமயத்தில் ரூ. 2,000 நோட்டுக்கு சில்லறைகள் வழங்குவதில் வணிகர்களும், பல்வேறு பிரிவினர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். உடனே அரசு அதற்கு ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, நாட்டில் ரூ. 2,000 பணத் தாளை அச்சடிப்பதை நிறுத்தியது. மேலும், புழக்கத்தில் இருக்கும் ரூ. 2,000 தாள்களையும் வங்கிகள் மூலம் அரசு திரும்ப பெறப்பட்டது. இதனால் தற்போது இந்தியாவில் அதிக மதிப்புக் கொண்டதாக ரூ. 500 தாள்களே உள்ளன.
இந்நிலையில், தற்போது அந்த உயர் மதிப்பு கொண்ட ரூ. 500 தாள்களையும் தடை செய்ய வேண்டும் என பாஜக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். இதற்கும் அவர் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை காரணமாக கூறியுள்ளார்.
ஆந்திராவின் கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சியின் மூன்று நாள் மாநாடு துவங்கியது. இதில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “டிஜிட்டல் பரிவர்தணை குறித்து ஏற்கனவே பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தேன். அதில் ரூ. 500, ரூ. 2000 நோட்டுகளை ஒழிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
புழக்கத்தில் இருக்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நீக்குவது பல நன்மைகளை தரும். ரூ. 500 நோட்டுகளை திரும்ப பெற வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் வலியுறுத்துகிறேன். தெலுங்கு தேசம் எப்போதும் தூய்மை அரசியலைத்தான் விரும்புகிறது. கருப்பு பணத்தை பயன்படுத்தியதே இல்லை. இன்று ஆந்திரா என்ன நினைக்கிறதோ அதையே நாளை இந்தியா நினைக்கிறது” என பேசியுள்ளார்.


