Last Updated:
பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியா பற்றி தவறான தகவல்களை பரப்பி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு உலக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை இந்தியாவும், பதிலுக்கு இந்தியாவுடனான வர்த்தகத்தை பாகிஸ்தானும் நிறுத்தியுள்ளன. மேலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அடாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு செய்து வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும், சாமா டி.வி. டான் நியூஸ் உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தன. அவை உண்மைக்கு புறம்பான தகவல்களாக இருந்ததாகவும், வகுப்புவாத மோதல்களைத் தூண்டும் வகையிலும் இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. குறிப்பிட்ட இந்த யூடியூப் சேனல்களை மொத்தமாக 6 கோடியே 30 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் 16 யூடியூப் சேனல்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது.
இதனை ஏற்று, 16 சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது மட்டுமின்றி பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தரின் “100 mph” என்ற யூடியூப் சேனலும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
April 28, 2025 12:05 PM IST


