
Last Updated:
இந்தியாவில் தயாரான பி17ஏ ஐஎன்எஸ் நீல்கிரி, பி15பி ஐஎன்எஸ் சூரத் மற்றும் பி75 ஸ்கார்பீன் கடற்படை கப்பல்கள்.
இந்திய உள்நாட்டு தயாரிப்பில் தயார் செய்யப்பட்ட மூன்று கடற்படை கப்பல்களை பிரதமர் மோடி நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். அதன்படி, பி17ஏ ஐஎன்எஸ் நீல்கிரி, பி15பி ஐஎன்எஸ் சூரத் மற்றும் பி75 ஸ்கார்பீன் ஆகிய மூன்று கடற்படை கப்பலை மும்பை கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
கடற்படை பயன்பாட்டுக்காக பி17ஏ ரகம் மற்றும் பி15பி ரக கப்பல்கள் தயாரிக்க மும்பையில் உள்ள மசகான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இந்த இரு கப்பல்களின் வடிவமைப்பை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பிரிவு உருவாக்கிக் கொடுத்தது.
பி17ஏ ரக கப்பலான ஐஎன்எஸ் நீல்கிரி கப்பல் கடலில் எந்த சூழ்நிலையிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல் எதிரிநாட்டு ரேடார்களில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் நெருங்கினால் இதில் உள்ள சென்சார் கருவிகள் உடனடியாகக் கண்டுபிடித்து எச்சரிக்கை விடும். அவற்றைத் தாக்குவதற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் இந்தக் கப்பலில் உள்ளன. இந்தப் போர்க்கப்பலுக்கு உதவியாக எந்த துணை போர்க்கப்பல்களும் செல்லத் தேவையில்லை. எங்கும் தனியாகச் செல்லும் முன்னணி கப்பலாக இது கடற்படையில் இருக்கும்.
அதேபோல் பி15 பி ரகத்தில் ஐஎன்எஸ் சூரத் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் மற்றும் பராக்-8 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஏவமுடியும். மேலும், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஆயுதங்களும், சென்சார்கள் இதில் உள்ளன. கப்பலின் அடிப்பகுதியில் சோனார் ஹம்சா என்ஜி, டார்பிடோ ஏவுகணைகளை ஏவும் ட்யூப் லாஞ்சர், ஏஎஸ்டபிள்யூ ராக்கெட் லாஞ்சர் ஆகியவை இந்தக் கப்பலில் உள்ளன.
இந்தியக் கடற்படையின் முந்தைய போர்க்கப்பல்களை விட அதிகளவிலான வசதிகள், இந்தப் புதிய போர்க்கப்பல்களில் உள்ளன. எதிரிப் படைகளின் தாக்குதலையும் தடுக்கும் திறனும் இந்தப் போர்க்கப்பலில் உள்ளது.
A memorable day, which will ensure a stronger India! pic.twitter.com/YypdGW9Q2K
— Narendra Modi (@narendramodi) January 15, 2025
பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப் நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 6-வது மற்றும் கடைசி பி75 ஸ்கார்பீன் ரக நீர் மூழ்கிக் கப்பலுக்கு ஐஎன்எஸ் வக்ஷீர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
January 16, 2025 9:05 PM IST

