Last Updated:
Corona Update | இந்தியாவில் ஒரே வாரத்தில் கொரோனா தொற்று 4 மடங்காக அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகத்தையே முடக்கிப் போட்டது. லட்சக்கணக்கான உயிரிழப்புகள், கோடிக்கணக்கில் பொருளாதார இழப்புகள் என ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்தது. இந்த பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு வந்த நிலையில், மீண்டும் அச்சுறுத்துகிறது கொரோனா. இந்த நிலையில், கொரோனா உருவானதாகக் கூறப்படும் சீனாவில், அதன் தாக்கம் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று உயர்ந்து வருகிறது.
இந்தியாவிலும் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பால், ஆயிரத்து 10 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில், 752 பேருக்கு அண்மையில் தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக ஒரே வாரத்தில் பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் 430 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 210 பேர், டெல்லியில் 104 பேர், தமிழ்நாட்டில் 69 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. கொரோனா வைரஸின் புதிய திரிபுகளான NB.1.8.1 மற்றும் LF.7 தொற்று பரவல் சற்று அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து கவலைக் கொள்ள தேவையில்லை என தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு மூத்த மருத்துவர் வித்யா லட்சுமி தெரிவித்துள்ளார். எனினும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது எனவும் கூறினார்.
இதனிடையே தமிழ்நாட்டில் ஒருவாரத்தில் 3 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 35 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தொற்று குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி, திருவிழாக்கள் போன்றவற்றில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள், குடிநீர், ஜூஸ் போன்றவற்றின் சுகாதார தன்மையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பிட வசதிகள் மற்றும் பாதுகாப்பான சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில், தொற்று பரவலைத் தடுக்க பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்


