ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருவதற்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தற்காலிகமாக மூடியது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதை முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்று எரிபொருளை நிரப்பிச் செல்லும் நிலை காணப்படுகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் எரிபொருள் தட்டுப்பாடு என பரவிய வதந்தியால் அங்குள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் முண்டியடித்துக் கொண்டு எரிபொருளை நிரப்பிச் சென்றனர்.
இதேபோன்று, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பெட்ரோல் விற்பனை மையங்களில் கூட்டம் அலைமோதியது. உடனடியாக பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏராளாமானோர் குவிந்த நிலையில், அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் 15 நாட்களுக்குப் போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு உள்ளதாகவும், மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அம்மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத் தலைவர் நரஹர் தாக்கூர் கேட்டுக்கொண்டார்.
VIDEO | Panjim: Goa Petrol Dealers Association President Narahar Thakur assures adequate stock of Petrol and Diesel on all the pumps for 15 days, urges people to avoid panic buying.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/g6MmGesuW8— Press Trust of India (@PTI_News) March 26, 2026
இந்நிலையில், நாட்டில் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிடம் மொத்தம் 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் மற்றம் எரிபொருள் கையிருப்பு உள்ள நிலையில், அடுத்த 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளதாகவும் உலகளவில் என்ன நடந்தாலும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான சமையல் எரிவாயு சரக்குகள் இந்தியா வந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் தேவையற்ற பீதிக்கு ஆளாகி எரிபொருளைச் சேமிக்க முற்பட வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, கத்தாரில் இருந்து 17 ஆயிரத்து 600 மெட்ரிக் டன் சமையல் எரிவாயுவுடன் புறப்பட்ட கப்பல் நேற்று மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தது. இங்கிருந்து நாடு முழுவதும் எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விநியோகம் செய்யப்பட உள்ளது.
எரிபொருள் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
