அப்படி இருக்க, இந்தியாவையும், ஐக்கிய அரபு எமிரேட்சையும் அதிவேக ரயில் போக்குவரத்து மூலம் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிவியற் புனைகதை போலத் தோன்றும் இந்த எண்ணத்தை, ஒரு பிரம்மாண்டமான உள்கட்டமைப்புத் திட்டம் நிஜமாக்க முயற்சி செய்கிறது. இந்தியாவையும், ஐக்கிய அரபு அமீரகத்தையும் இணைக்கும் வகையில், அரபிக்கடலுக்கு அடியில் இயக்கப்படும் ஒரு அதிவேக ரயில் திட்டம் தற்போது உலகளவில் பேசுபொருளாகி வருகிறது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வைரல் வீடியோ, இந்த லட்சிய முயற்சியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. எதிர்காலத் தொழில்நுட்பத்தின் உதவியுடன், நீருக்கடியில் செல்லும் அதிவேக ரயில் எவ்வாறு செயல்படும் என்பதை அந்த வீடியோ கற்பனை வடிவில் விளக்குகிறது.
அந்தக் வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவலின் படி, “டீப் ப்ளூ எக்ஸ்பிரஸ்” என அழைக்கப்படும் இந்த ரயில், அரபிக்கடலுக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை வழியாக மும்பையையும், துபாயையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 600 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த ரயில், பல விமானங்களை விடவும் வேகமானதாக இயங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ரயில் செயல்பாட்டுக்கு வந்தால், தற்போது 3 முதல் 3.5 மணி நேரம் ஆகும் விமானப் பயணம், வெறும் இரண்டு மணி நேரமாகக் குறையும். அதே நேரத்தில், இது ஒரு சாதாரண பயணம் மட்டுமல்ல, முற்றிலும் புதிய அனுபவமாகவும் அமையும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மிகவும் வியப்பூட்டும் அம்சங்களில் ஒன்று, சுரங்கப்பாதையின் வடிவமைப்பாகும். கடலுக்கு அடியில் சுமார் 200 மீட்டர் கீழே பயணிக்கும் போது, சுரங்கத்தின் சுவர்களில் அமைக்கப்படும் பெரிய ஜன்னல்கள் வழியாக கடல்வாழ் உயிரினங்களைப் பார்க்கும் அனுபவம் கிடைக்கும் என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான திமிங்கலங்கள், சுறாக்கள், மீன் கூட்டங்கள் ஆகியவை பயணிகளைக் கடந்து நீந்துவதை நேரடியாகக் காணும் வகையில் இந்தப் பயணம் அமையும். இதை, “உலகின் மிக நீளமான மீன் காட்சியகத்திற்குள், ஹைப்பர்சோனிக் வேகத்தில் பயணிப்பது போன்ற அனுபவம்” என்று வீடியோவின் வர்ணனையாளர் விவரிக்கிறார்.
இந்த நீருக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை, பயணிகள் போக்குவரத்துக்காக மட்டுமல்ல. இரட்டை நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், துபாயிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெயையும், இந்தியாவிலிருந்து துபாய்க்கு நன்னீரையும் கொண்டு செல்லும் வசதியையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், எரிசக்தி தேவை, குடிநீர் தேவை போன்ற இரண்டு முக்கிய பிரச்சனைகளுக்கு ஒரே நேரத்தில் தீர்வு காண முடியும் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்பிடப்படும் இந்தத் திட்டம், இதுவரை முன்மொழியப்பட்ட மிக விலையுயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், அதன் முக்கியத்துவம் வெறும் செலவோ அல்லது பொறியியல் சாதனையோ மட்டுமல்ல.
இந்தத் திட்டம் 50,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், மும்பையை ஒரு உலகளாவிய போக்குவரத்து மையமாக மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியா – ஐக்கிய அரபு அமீரக இடையிலான பயணச் செலவுகளை சுமார் 60 சதவீதம் வரை குறைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
“2030-ஆம் ஆண்டுக்குள், மும்பையில் காலை உணவை முடித்துவிட்டு, கடலுக்கடியில் அரிய உயிரினங்களை ரசித்தபடியே துபாயில் மதிய உணவருந்தலாம்” என்ற கருத்தே இந்த வீடியோவின் மையமாக உள்ளது. இது தற்போது ஒரு கற்பனைத் திட்டமாக இருந்தாலும், எதிர்காலத்தில் மனிதர்களின் பயண வரையறைகளை முற்றிலும் மாற்றக்கூடிய ஒரு கனவாக, உலகம் இதைப் பார்க்கத் தொடங்கியுள்ளது.

