முன்னதாக குஜராத்தின் பாவ் நகரிலிருந்து பாவ்நகர்-அயோத்தி எக்ஸ்பிரஸ், ரேவா-புனே (ஹடப்சர்) எக்ஸ்பிரஸ் மற்றும் ஜபல்பூர்-ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று புதிய விரைவு ரயில் சேவைகளை மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
விழாவின்போது பேசிய மத்திய அமைச்சர் வைஷ்ணவ், “மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான முதல் புல்லட் ரயில் சேவை மிக விரைவில் தொடங்க உள்ளது, மேலும் இந்தத் திட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நாட்டின் முதல் புல்லட் ரயில் ஓடத் தொடங்கும்போது, மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான பயணம் வெறும் 2 மணி நேரம் 7 நிமிடங்களாக மட்டுமே இருக்கும்” என்றார்.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே 508 கிலோ மீட்டர் தூரம் இயக்கப்பட உள்ளது. மணிக்கு 320 கி.மீ. வேகத்தில், இது மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) தொடங்கி குஜராத்தின் வாபி, சூரத், ஆனந்த், வதோதரா மற்றும் அகமதாபாத் பகுதிகளை இணைக்கும்.
இதனிடையே விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் இடையே ஒரு புதிய ரயில், ரணவாவ் நிலையத்தில் ரூ.135 கோடியில் கோச் பராமரிப்பு ஆலை, போர்பந்தர் நகரில் ஒரு ரயில்வே மேம்பாலம், இரண்டு கதி சக்தி கார்கோ டெர்மினல்ஸ் மற்றும் பாவ்நகரில் வரவிருக்கும் துறைமுகத்தில் ஒரு கன்டெய்னர் டெர்மினல் ஆகியவை குஜராத்தில் வரவிருக்கும் சில ரயில்வே திட்டங்கள் என்று குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் வைஷ்ணவின் கூற்றுப்படி, பிரதமர் நரேந்திர மோடியினுடைய அரசு நிர்வாகத்தின் 11 ஆண்டுகளில் 34,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 12 கி.மீ. புதிய பாதைகள் கட்டப்படுகின்றன. அதேபோல நாட்டில் முதன்முறையாக 1,300 ரயில் நிலையங்களை மறுவடிவமைக்கும் பணியும் செய்யப்பட்டு வருகிறது. இது உலகின் மிகப்பெரிய ரயில் நிலைய நவீனமயமாக்கல் திட்டத்தை குறிக்கிறது.
பொதுவாக தொழில்மயமான நாடுகளில், அனைத்து ரயில் மற்றும் நிலைய இயக்கங்களை தற்காலிகமாக மூடுவதன் மூலம் ரயில் நிலையங்களின் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நம் நாட்டில் அதிக மக்கள்தொகை உள்ளது, மேலும் பணிகளும் நடக்க வேண்டும், ரயில்கள் ஓட வேண்டும், அதே சமயம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. இந்த சவால்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ரயில் நிலையங்களை புதுப்பிப்பது பற்றி பிரதமருக்கு ஒரு பெரிய தொலைநோக்கு பார்வை உள்ளது என தெரிவித்தார்.
பிரதமர் மோடி அரசின் நிர்வாகம் தொடங்கியுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் நமோ பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் குறித்தும் மத்திய அமைச்சர் பேசினார். “இதுவரை 8 அமிர்த பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் வந்தே பாரத் ரயில்கள் போன்ற அம்சங்கள் உள்ளன, ஆனால் கட்டணம் குறைவு. மேலும் இந்த ரயில்கள் நவீன யுக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த ரயில்களை பயன்படுத்தும் பயணிகளின் பயண அனுபவங்களை கேட்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்” என்றார்.
August 07, 2025 1:42 PM IST

