உள்ளூர் கனிமத் தொழில்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாரம்பரியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த சுரங்கப் பகுதிகளை சுற்றுலா மூலம் முன்னிலைப்படுத்த ஜார்க்கண்ட் அரசாங்கம் தற்போது திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், சுரங்க சுற்றுலாவைத் தொடங்கும் முதல் மாநிலம் என்ற சிறப்பை ஜார்க்கண்ட் பெறுகிறது.
சமீபத்தில் பார்சிலோனாவிற்கு பயணம் செய்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அங்குள்ள காவா சுரங்க அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட பிறகு இந்த புதுமையான முயற்சியை செயல்படுத்த அறிவித்தார். பார்சிலோனாவில் அவர் பண்டைய சுரங்க நுட்பங்களையும் புதிய கற்காலத்தின் நினைவுச் சின்னங்களையும் பார்வையிட்டார். இந்த யோசனையை அவர் எடுக்கத் தூண்டுதலாக இதுவே அமைந்ததாகக் கூறப்படுகிறது.
சுரங்கத் துறை எப்போதுமே வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாமலும் அதிகம் பேசப்படாமலும் இருந்து வருகிறது. ஆனால், இந்த சுற்றுலாத் திட்டத்தின் மூலம் இந்தத் துறை கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாணவர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் இதன் செயல்பாடு மற்றும் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.
இந்தியாவின் மொத்த கனிம வளத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது. “ஜார்க்கண்ட் ஒரு சுரங்க மாநிலமாக அறியப்படுகிறது. CCL உடன் இணைந்து மாநிலத்தில் சுரங்க சுற்றுலாவை நோக்கிய முதல் படியை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம். இப்போது, சுரங்கத் துறை சுற்றுலாப் பயணிகள், சாதாரண மக்கள் மற்றும் கல்வி குழுக்களுக்கு திறந்திருக்கும்” என்று மாநில சுற்றுலா அமைச்சர் சுதிவ்ய குமார் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தை நன்கு திட்டமிடப்பட்ட முறையில் தொடங்க, மாநில அரசு கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (CCL) உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. ஜார்க்கண்ட் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (JTDC) அனைத்து செயல்பாடுகளையும் CCL மற்றும் பிற பங்குதாரர்களின் ஆதரவுடன் நிர்வகிக்கும்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாகத் தொடங்கும். முதல் கட்டமாக ராம்கர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு உரிமாரி (பிர்சா) திறந்தவெளி நிலக்கரி சுரங்கத்திற்கு அறிமுக சுற்றுப் பயணத்துடன் தொடங்கும். இந்தப் பயணத்தில், சுற்றுலாப் பயணிகளுக்காக இரண்டு சுற்றுலா வழிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராஜ்ரப்பா வழித்தடம்: இதற்கு ஒரு நபருக்கு ரூ.2,800 + ஜிஎஸ்டி செலவாகும். இந்த வழித்தடத்தில் சின்னமாஸ்திகா கோயில் மற்றும் பனோரமிக் பள்ளத்தாக்கு போன்ற பல்வேறு தளங்களையும் பார்வையிடலாம்.
பட்ராட்டு வழித்தடம்: இதற்கு ஒரு நபருக்கு ரூ.2,500 + ஜிஎஸ்டி செலவாகும். மேலும், சுரங்கத்தை பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு முன்பு, பர்யதன் விஹார் தளமும் இந்தப் பயணத்தில் அடங்கும்.
இந்த சுற்றுலாக்கள் வாரத்திற்கு இரண்டு முறை நடைபெறும், மதிய உணவும் இதில் அடங்கும் என்றும் ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 20 பேர் வரை இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலாவில் நிலக்கரி சுரங்கங்களைத் தவிர, அதனைச் சுற்றியுள்ள கலாச்சார மற்றும் இயற்கை அடையாளங்களுக்கும் பார்வையாளர்களை அழைத்துச் செல்லப்படுவார்கள். பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (BCCL) உடன் இணைந்து மற்றொரு சுரங்க சுற்றுலாப் பாதையைத் தொடங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
July 26, 2025 9:17 PM IST

