Last Updated:
ஹோம் பிராட்பேண்ட் (Home Broadband) பிரிவிலும் 27.1 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் 42.6% சந்தைப் பங்கைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் (Jio Platforms Ltd), தனது பிரம்மாண்ட ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) முன்னதாக நிதிநிலையை மிகவும் பலப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் கடன் அளவு பெருமளவில் குறைந்து, இலவச பணப்புழக்கம் (Free Cash Flow) பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிகர கடன் விகிதம் நிதியாண்டு 2024-இல் (FY24) 0.88 ஆக இருந்த நிலையில், நிதியாண்டு 2026-இல் (FY26) 0.36 ஆகக் குறைந்துள்ளது. இது கடன்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, நிறுவனத்தின் நிதிச் சுதந்திரத்தை அதிகரித்துள்ளது. மூலதனச் செலவினங்களுக்குப் பிறகு பெறப்படும் பணப்புழக்கம் நிதியாண்டு 2024-இல் ரூ. 1,449 கோடியாக இருந்தது, நிதியாண்டு 2026-இல் ரூ. 42,071 கோடியாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் நிதியாண்டு 2024-இல் இருந்த ரூ. 1.10 லட்சம் கோடியிலிருந்து உயர்ந்து, நிதியாண்டு 2026-இல் ரூ. 1.47 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதே காலக்கட்டத்தில், வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) ரூ. 21,423 கோடியிலிருந்து ரூ. 30,049 கோடியாக அதிகரித்துள்ளது.
பயனர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி மாத வருவாய் (ARPU) ரூ. 181.7-லிருந்து ரூ. 214 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு பயனரின் சராசரி மாத தரவுப் பயன்பாடு (Data Consumption) 28.7 GB-யிலிருந்து 42.3 GB ஆக அதிகரித்துள்ளது.
நிறுவனம் ஐபிஓ மூலம் திரட்டும் நிதியில் ஒரு பகுதியை, தனது தொலைத்தொடர்பு துணை நிறுவனமான ‘ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம்’ பொதுவான கார்ப்பரேட் தேவைகளுக்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ அக்டோபர் 21 அன்று தொடங்கப்பட்டு, அக்டோபர் 28 அன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜியோ வெறும் தொலைத்தொடர்புச் சேவையோடு நிற்காமல் சொந்தமாக 5G தொழில்நுட்பத்தை உருவாக்கிப் காப்புரிமைகளையும் (1,000-க்கும் மேற்பட்ட கிராண்ட் செய்யப்பட்ட பேட்டன்ட்கள்) பெற்றுள்ளது.
தனது உள்நாட்டு 5G/6G தொழில்நுட்பங்களை சர்வதேச அளவில் பிற நாடுகளுக்கும் வழங்கி புதிய வருவாய் வழிகளை உருவாக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. அத்துடன், ஹோம் பிராட்பேண்ட் (Home Broadband) பிரிவிலும் 27.1 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் 42.6% சந்தைப் பங்கைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது.

