புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக உயரும் என ஐஎம்எப் தனது கணிப்பை உயர்த்தி உள்ளது. சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2025-26 நிதியாண்டில் 6.4% வளரும் என ஜூலை மாதம் வெளியிட்ட உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், முதல் காலாண்டில் நிறுவனங்களின் லாபம் கணிசமாக அதிகரித்திருந்தது. 5 காலாண்டுகளில் இல்லாத வகையில், முதல் காலாண்டு ஜிடிபி 7.8% ஆக இருந்தது. மேலும் உள்நாட்டு தேவை அதிகரிப்பு, அரசின் செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், இந்தியாவின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் 6.6% ஆக உயரும்.
அதேநேரம், இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளதால், 2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.2% ஆக குறையும். முந்தைய கணிப்பில் 6.4% ஆக இருக்கும் என கணித்திருந்தோம். 2025-26ல் உலக நாடுகளின் சராசரி ஜிடிபி 3.2% ஆக இருக்கும். அடுத்த 2026-27 நிதியாண்டில் இது 3.1% ஆக இருக்கும். 2024-25-ல் இது 3.3% ஆக இருந்தது. வளர்ந்த நாடுகளின் சராசரி ஜிடிபி 1.5%ஆக இருக்கும்.
இதில் அமெரிக்காவின் ஜிடிபி 2% வளரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோல, இந்தியாவின் ஜிடிபி 6.3% வளரும் என உலக வங்கி ஏற்கெனவே கணித்திருந்தது. இந்நிலையில், இந்த கணிப்பை 6.5% ஆக உலக வங்கி கடந்த மாதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. ஐஎம்எப் கணிப்பின்படி, உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது.
விரைவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். அதன் பிறகு, ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி 3-ம் இடத்துக்கு முன்னேறும் என்றும் ஐஎம்எப் கணித்துள்ளது.

