Last Updated:
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளைக் கொண்டிருக்கும் நகரம் என்ற பெருமையை தேசிய தலைநகரான டெல்லி பெற்றுள்ளது.
இந்தியாவில் இருக்கும் கல்வி மையங்களைப் பற்றிப் பேசும்போது, பெங்களூரு, புனே, மும்பை, கொல்கத்தா மற்றும் லக்னோ போன்ற நகரங்கள் பற்றியே பலரும் விவாதிப்பார்கள். ஆனால், CBSE என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ்வரும் பள்ளிகளைப் பொறுத்தவரை, இந்த நகரங்களில் எதுவும் பட்டியலில் முதலிடத்தில் இல்லை.
ஆம், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளைக் கொண்டிருக்கும் நகரம் என்ற பெருமையை தேசிய தலைநகரான டெல்லி பெற்றுள்ளது. டெல்லி நகரின் கல்வி அமைப்பு சிபிஎஸ்இ-க்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் பொது மற்றும் தனியார் கல்வி என இரண்டிற்கும் CBSE வாரியமே பெற்றோர்களின் முதன்மை தேர்வாக உள்ளது.
நாட்டின் தலைநகரம் என்பதால் டெல்லி நகரம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்களை ஈர்க்கிறது. மத்திய அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் தனியார் துறை வல்லுநர்களின் குடும்பங்கள் இடமாற்றங்கள் காரணமாக அடிக்கடி தாங்கள் வேலை செய்யும் நகரங்களை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய குடும்பங்களுக்கு, சீரான பாடத்திட்டம் மற்றும் நாடு தழுவிய அங்கீகாரம் காரணமாக, சிபிஎஸ்இ பள்ளிகளே மிகவும் பொருத்தமான தேர்வாக இருக்கின்றன.
நாட்டின் தலைநகரமாக இருப்பதால், டெல்லியானது முக்கிய தேசிய நிறுவனங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி அமைப்புகளின் இருப்பிடமாக திகழ்கிறது. ஜேஇஇ மற்றும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளுடன் சிபிஎஸ்இ பள்ளிகள் நன்கு ஒத்துப்போகின்றன. எனவே, நீண்டகால கல்வி இலக்குகளில் கவனம் செலுத்தும் பெற்றோர்களிடையே சிபிஎஸ்இ பள்ளிகள் மிகவும் பிரபலமாக உள்ளன.
அதேபோல், டெல்லியில் சிபிஎஸ்இ பள்ளிகளின் ஆதிக்கம் என்பது வெறும் எண்ணிக்கையை மட்டும் சார்ந்தது அல்ல. ஏனென்றால், மலிவு விலையில் கல்வி வழங்கும் அரசுப் பள்ளிகள் முதல் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உயர்தர தனியார் பள்ளிகள்வரை பரந்த அளவிலான பள்ளிகள் தலைநகரில் உள்ளன. பெற்றோர்கள் சிபிஎஸ்இ கட்டமைப்பிற்குள்ளேயே இருந்துகொண்டு, தங்கள் பட்ஜெட், கல்விசார் கவனம் அல்லது பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகளைத் தேர்வு செய்யலாம்.
மொத்தத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் டெல்லி நகரில் உள்ளன. வலுவான அரசாங்க ஆதரவு (டெல்லி அரசின் அனைத்துப் பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றுகின்றன), ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை விரும்பும் இடம்பெயரும் குடும்பங்களிடமிருந்து வரும் அதிக தேவை மற்றும் தலைநகர் என்ற அந்தஸ்து போன்றவை காரணமாக, டெல்லியானது சிபிஎஸ்இ கல்விக்கான மிகப்பெரிய நகர்ப்புற மையமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
January 07, 2026 9:00 PM IST


