இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியூஸ் 18 குழுமத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கிடம், நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷி நேர்காணல் நடத்தினார். ராகுல் ஜோஷி கேட்ட பல கேள்விகளுக்கு ராஜ்நாத் சிங் அளித்த பதிலில் கூறியதாவது-
பயங்கரவாதத்திற்கு எதிராக மத்திய பாஜக அரசு மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் புரிந்து கொள்ள தொடங்கியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் செயல்பட்டு அவர்கள் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றாலும் கூட அவரை இந்திய ராணுவம் பின் தொடர்ந்து பாகிஸ்தான் மண்ணிலும் அவரை வீழ்த்தும்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிநாட்டு மண்ணிலும் ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணி வருகிறது. அதுதான் இந்தியாவின் வரலாறு. இந்தியா எந்த ஒரு நாட்டையும் தாக்குவது இல்லை. எந்த ஒரு அண்டை நாட்டின் நிலப்பரப்பையும் இந்தியா ஆக்கிரமித்தது கிடையாது. இதுதான் நம் மண்ணின் குணம்.
அதே சமயம் இந்தியாவுக்கு எதிராக யாரேனும் பயங்கரவாதத்தை தூண்டினால் அவர்கள் நம்முடைய நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாது. பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும். அந்த பகுதி மக்கள் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். அதனை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தியதை பார்க்கலாம்.
காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட தொடர்ந்து அங்கு வளர்ச்சி வேகமாக உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. ஆனால் இது பற்றி உள் துறை அமைச்சகம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…