Last Updated:
பாகிஸ்தான் விமானி இந்திய ராணுவத்திடம் சிக்கியுள்ளார். இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதி முகாம்களை அழித்தது. S 400 பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது.
இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்த ஒன்பது பயங்கரவாதி முகாம்களை தாக்கி, அழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களில் இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. மேலும், இன்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலையும் பாகிஸ்தான் மேற்கொண்டது. அவற்றை இந்திய ராணுவம் முறியடித்து தோல்வி அடைய செய்தது. இதில், அதிநவீன S 400 வான்வழி பாதுகாப்பு அமைப்பை பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இன்று இரவு, ஜம்மு & காஷ்மீரில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து அதனை முறியடித்திருக்கிறது. ஜம்மு பகுதியில், கட்ரா, அதன் அருகில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில், தெற்கு காந்திநகர் உள்ளிட்ட இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதனை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் விமானநிலையத்தை குறிவைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதனை முறியடித்து இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இவற்றை S 400 சுதர்சன் சக்கராவை பயன்படுத்தி தடுத்து முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் ஜெ-17 போர் விமானத்தை இந்திய விமானப்படை எதிர்தாக்குதல் நடத்தி அதனை நொறுக்கியுள்ளது. சீனாவின் தயாரிப்பான ஜெ-17 போர் விமானம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அதனை இந்திய ராணுவம் தகர்த்துள்ளது. ஜம்மு & காஷ்மீர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள முக்கிய மாவட்டங்களில் முழு பிளாக் அவுட் போடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமபாத், லாகூர் ஆகிய பகுதிகளில் இந்திய ராணுவம் எதிர் தாக்குதலை துவக்கி நடத்திவருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. அதற்கு எதிர் தாக்குதலை இந்தியா செய்தது. இதில், பாகிஸ்தான் F-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்து பாகிஸ்தான் விமானப்படை விமானி உயிருடன் இந்திய ராணுவத்திடம் சிக்கியுள்ளார். அதனை அடுத்து அவர் தற்போது இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
May 08, 2025 10:57 PM IST


