Last Updated:
தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை அவ்வப் போது கவனித்து அப்டேட்டுகளை பெற வேண்டும் என்றும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது
ஈரானில் உள்ள மாணவர்கள், தொழிலதிபர்கள் சுற்றுலா பயணிகள் உட்பட அனைத்து இந்தியர்களும் விரைவில் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும், தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் ஈரானில் உள்ள இந்தியர்களை தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரானின் மோசமான பொருளாதார நிலை மற்றும் ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல நகரங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் இழுபறி நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் 10-15 நாட்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும், இல்லையெனில் “விளைவுகள் மோசமாக இருக்கும்” என எச்சரித்துள்ளார். இதனால் ஈரானின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும், எந்த நேரத்திலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு வெளிநாடுகள் ஈரானில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தூதரகம் முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதன்படி ஈரானில் தங்கியுள்ள இந்திய மாணவர்கள், தொழிலதிபர்கள், ஆன்மீகப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வணிக ரீதியிலான விமானங்கள் அல்லது கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக இந்தியா திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போராட்டங்கள் அல்லது மக்கள் கூட்டமாக கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பாஸ்போர்ட், அடையாள அட்டைகள் மற்றும் விசா தொடர்பான ஆவணங்களை எப்போதும் கையில் தயாராக வைத்திருக்க வேண்டும் அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் வெளியேற தூதரகம் அதிரடி உத்தரவு.. ஈரானில் நிலவும் பதற்றத்தால் மத்திய அரசு நடவடிக்கை..


