Last Updated:
தொழில்நுட்பமும், விநியோகச் சங்கிலிகளும் மற்ற நாடுகளை ஒடுக்குவதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படக் கூடாது – பிரதமர் மோடி
உலகளாவிய கடல்சார் வணிகப் பாதைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பதற்றம் நிறைந்த பகுதிகளில் பணியாற்றும் கப்பல் ஊழியர்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உலக நாடுகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அவசர அழைப்பு விடுத்துள்ளார். ஓமன் வளைகுடாவில் அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களேயான நிலையில், ஜி7 உச்சமாநாட்டில் பிரதமர் மோடி இந்த விவகாரத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஜி7 உச்சமாநாட்டின் ‘புதிய கூட்டணிகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மறுசீரமைத்தல்’ என்ற தலைப்பிலான சிறப்புக் அமர்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, மேற்கு ஆசியாவில் நிலவும் ஸ்திரமற்ற சூழல் உலகளாவிய வர்த்தகத் துறைக்கும், மனித உயிர்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
பிரதமர் மோடி தனது உரையில் “உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தின் மூலம் உலக நாடுகளை பரஸ்பரம் இணைக்கும் கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது கூட்டுப் பொறுப்பாகும். கடல்சார் பாதைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; மாலுமிகள் எந்தவித அச்சமும் இன்றி தங்களது பணிகளைச் செய்யக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகத் துறையின் மிக முக்கியப் பாதையான ‘ஹார்முஸ் நீரிணைப்பில்’ (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள தடைகள், உலகப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்துள்ளதோடு, இந்தியக் குடிமக்களின் உயிர் இழப்பிற்கும் வழிவகுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் ஓமன் கடற்பகுதியில் ‘செட்டபெல்லோ’ (Settebello) என்ற எண்ணெய் டாங்கர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீற முயன்றதாகக் கூறி, ஜூன் 8 முதல் 11 வரையிலான தேதிகளில் மூன்று கப்பல்கள் மீது அமெரிக்காவின் மத்திய கட்டளையகம் இந்தத் தாக்குதலை நடத்தியிருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதற்கு முந்தைய நாள், பிரதமர் மோடி இந்த விவகாரத்தை ஜி7 மேடையில் வெளிப்படையாகப் பேசியிருப்பது சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது. அதே நேரத்தில், மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை வரவேற்ற பிரதமர், அப்பகுதி விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு நாட்டின் எரிசக்தி, உணவு, ஆரோக்கியம் மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவை அந்த நாட்டின் எல்லைகளுக்குள் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. தொழில்நுட்பமும், விநியோகச் சங்கிலிகளும் மற்ற நாடுகளை ஒடுக்குவதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படக் கூடாது; மாறாக அவை ஒட்டுமொத்த உலகின் நன்மைக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, வளர்ந்து வரும் நாடுகளுக்கு சர்வதேச அளவில் வலுவான பங்களிப்பு தேவை என்று கோரிக்கை விடுத்த பிரதமர், ‘குளோபல் சவுத்’ (Global South) எனப்படும் தென்னக நாடுகள் எதிர்பார்ப்பது வெறும் நிதி உதவிகளை அல்ல, மாறாகச் சமமான கூட்டாண்மையைத் தான் என்றும், அவர்கள் உலகளாவிய வளர்ச்சியின் வெறும் பயனாளிகளாக மட்டும் இருக்க விரும்பாமல், சமமான பங்குதாரர்களாக மாற விரும்புகிறார்கள் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.


