புதுடெல்லி:
இந்திய அரசு, வரும் 2026–27 கல்வியாண்டு முதல், நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் 3ஆம் வகுப்பு மாணவர்களிலிருந்து தொடங்கி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்கான திட்டமிடலை விவாதிக்க கல்வி அமைச்சு தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அதில் பேசிய பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் சஞ்சய் குமார், இன்றைய காலகட்டத்தில் ‘ஏஐ’ பற்றிய அறிவு இளைய தலைமுறைக்கு இன்றியமையாதது என வலியுறுத்தினார்.
“செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு பாடமல்ல, அது உலகத்துடன் இணைவதற்கான அடிப்படை திறமை. எதிர்கால சமூகத்தில் பங்கேற்க வேண்டுமானால் மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெற வேண்டும்,”
என்று அவர் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் ‘ஏஐ’ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது மனித வாழ்க்கையில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், சில துறைகளில் வேலைவாய்ப்பு குறைவின் அபாயமும் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.
இந்திய அரசு, மாணவர்களுக்கு நெறிமுறை ரீதியாக ‘ஏஐ’ பயன்பாட்டை கற்பிக்க இதனை முக்கியமான முதல் அடியாகக் காண்கிறது. இந்த புதிய பாடத்திட்டம், சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.




