Last Updated:
இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியப் பங்குச் சந்தையில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை பட்டியலிடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவிலான ரூ.30,213 கோடி மதிப்பிலான ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) ஆதரவு பெற்ற ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம், டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுகம் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன் வெளிப்பாடாக, ஐபிஓ வெளியீட்டின்போது முதலீட்டாளர்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்தது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியீட்டில் சுமார் ரூ.7.3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு விண்ணப்பங்கள் குவிந்தன. இதன் மூலம், இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் அதிக கவனத்தை ஈர்த்த பொதுப் பங்கு வெளியீடுகளில் ஒன்றாக இது மாறியது. இந்த ஐபிஓ 22.19 மடங்கு சந்தா செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்தை (NSE) ஆகியவற்றில் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்படுவதற்கு முன்பாகவே முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவியது.
இந்தப் பட்டியலிடும் நிகழ்வு, தனியார் துறையில் முன்னணி டிஜிட்டல் நிறுவனமாகச் செயல்பட்டு வந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், பொதுப் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனமாக மாறுவதில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியில் முதலீட்டாளர்கள் நேரடியாகப் பங்கேற்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்வில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் அனந்த் அம்பானி, உரையாற்றினார். அவர் பேசும்போது, “ஜியோ உங்களால் உருவானது. உங்கள் கனவுகளை நிறைவேற்றுவது தான் எங்களுடைய எண்ணம். ஜியோ குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு நன்றி. ஜியோ இன்று என்ன நிலையில் இருக்கிறதோ அதற்கு நீங்கள் தான் காரணம். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர் நிர்வாக இயக்குநர் இஷா அம்பானி உரையாற்றினார். “இன்னும் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன் தொடக்கம் தான் இது. ஜியோவை நம்பி முதலீடு செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி” என்றார்.
ரிலையன்ஸ் ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி பேசுகையில், “ஜியோ பங்கு வெளியீடு ‘பிளாக்பஸ்டர் வெற்றி’ பெற்றுள்ளது. என்னை பொறுத்தவரை இது புதிய அனுபவமாக இருந்தது. ஜியோவின் புதிய பங்குதாரர்களுக்கு என் மனதிலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்கு காரணமாக ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் நன்றி. கடந்த 50 ஆண்டுகளில் ரிலையன்ஸ் செய்ததை, அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஜியோ தொடர்ந்து செய்யும். உலக அளவில் பெருமை மிக்க நிறுவனமாக ஜியோவை கொண்டு செல்வோம். ஜியோவின் வருகையால் இந்தியாவின் இணைய சேவை மேம்பட்டுள்ளது. இணைய வசதி இல்லாத மலை பகுதிகளிலும் தற்போது ஜியோ சேவை கிடைக்கிறது” என்றார்.


