கோலாலம்பூர் :
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜூலை 1 முதல் 7 வரை மூன்று முக்கிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கிய ஒரு வார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த பயணம் மலேசியாவிற்கு பொருளாதார, வர்த்தக மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் (PMO) தெரிவித்துள்ளது.
நாளை முதல் மூன்று நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் இத்தாலிக்கு செல்கிறார். அவர்
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அழைப்பின் பேரில் பிரதமர் அந்நாட்டிற்கு செல்கிறார் என்று இத்தாலிக்கான மலேசிய தூதர் டத்தோ ஜாஹித் ரஸ்தம் கூறினார்.
இந்தப் பயணம் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மலேசியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்கள் துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் புதிய முயற்சிகளை ஆராய்வதில் அரசாங்கத்தின் உறுதியையும் காட்டுகிறது என்று அவர் கூறினார். இத்தாலியை தொடந்து பிரதமர் பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் செல்கிறார்.
மேலும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கூட்டணியில் ஒரு கூட்டாளி நாடாக, பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.