
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நாடுகளுக்குப் பின்னர் இத்தாலியில் இன்று மெலோனியுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
மே 15 முதல் 20 வரையிலான 6 நாள் வெளிநாட்டுப் பயணத்தின் இறுதிக் கட்டமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி சென்றடைந்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே ஆகிய நான்கு நாடுகளுக்குப் பின் இத்தாலியில் இன்று (மே 20) நுழைந்த மோடிக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரோம் விமான நிலையத்தில் இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். இதனையடுத்து, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மோடிக்கு விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது இருவரும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். ‘Welcome to Rome, my friend’ (ரோமுக்கு வருக, நண்பரே) என மெலோனி வெகுவாக வரவேற்றதுடன், உணவகத்தில் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு, உலகளவில் கவனத்தைப் பெற்றது.
இன்று (மே 20) நடைபெறும் முக்கிய இருநிலைப் பேச்சுவார்த்தையின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, தூய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, மற்றும் இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) உள்ளிட்ட முக்கியத் துறைகளில் இடையிலான உறவுகளை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2025-2029 கூட்டு மூலோபாய நடவடிக்கைத் திட்டம் (Joint Strategic Action Plan) மறுஆய்வு செய்யப்படும். 2025 ஆம் ஆண்டில் இந்தியா-இத்தாலி இடையேயான இருநாட்டு வர்த்தகம் 16.77 பில்லியன் டாலர்களாக இருந்தது, மேலும் இத்தாலியிடமிருந்து இந்தியாவுக்கான ஒட்டுமொத்த நேரடி முதலீடு 3.66 பில்லியன் டாலர்களாக இருந்தது.
இப்பேச்சுவார்த்தையின்போது 2029ஆம் ஆண்டிற்குள் 20 பில்லியன் யூரோ வர்த்தக இலக்கை எட்டுவது குறித்தும் கலந்துரையாடப்படும். இரு தலைவர்களும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவையும் சந்தித்து உரையாடுவார்.

