ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 36 வயது பெண்ணை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் விழுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசி பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று 36 வயதான சிரியாட்டி எனும் பெண் தனது குழந்தைகளுக்காக மருந்து வாங்க மெடிக்கல் ஷாப் சென்றிருக்கிறார். ஆனால் அன்றிரவு அவர் வீடு திரும்பவில்லை. எனவே கணவர் அடியன்சா போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். போலீசார் அருகில் உள்ள அனைத்து மெடிக்கல் ஷாப்களிலும் விசாரித்திருக்கிறார்கள். ஆனால், சிரியாட்டி எந்த கடைக்கும் போகவில்லை.
எனவே போலீசார் ஆள் கடத்தில் கோணத்தில் விசாரணையை தொடங்கினர். மத்திய இந்தோனேசியா முழுவதும் உள்ள காவல் நிலையத்திற்கு சிரியாட்டியின் போட்டோ அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டை நடந்திருக்கிறது. ஆனால் எங்கு தேடியும் சிரியாட்டி கிடைக்கவில்லை.
மறுபுறம் போலீசை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று கணவர் அடியன்சா தன்னுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு தேடுதல் பணியில் இறங்கினார். அப்போது இவர் வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் மனைவியின் செருப்பு மற்றும் உடைகள் கிடந்திருக்கின்றன. இதனையடுத்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போதுதான் 10 மீ தூரத்தில் பெரிய மலைப்பாம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறான சைஸில் வயிறு வீங்கிய நிலையில் அப்பாம்பு நகர முடியாமல் தவித்திருக்கிறது. சந்தேகத்தின் பேரில் காவல்துறைக்கு கணவர் தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் போலீசார் முன்னிலையில் பாம்பு வெட்டப்பட்டிருக்கிறது. அதன் வயிற்றிற்குள் சிரியாட்டி சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்தோனேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த மாதம் இதேபோல சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணை மலைப்பாம்பு ஒன்று விழுங்கியிருந்தது. இதே தெற்கு சுலவேசி மாகாணத்தில்தான் இந்த சம்பவமும் நடந்திருந்தது.
கலேம்பாங் கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஃபரிதா எனும் பெண் தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில் கடந்த ஜூன் 6ம் தேதி அவரை காணவில்லை. எனவே அவரது கணவரும், கிராமத்தினரும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
ஒரு நாள் முழுவதும் எங்கு தேடியும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேடுதல் முயற்சியை கைவிடாத கணவர், கிராம மக்களின் உதவியுடன் காட்டுக்குள் தேடியிருக்கிறார். அங்கு அவரது மனைவி பயன்படுத்தும் விவசாய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. உடனே அந்த பகுதியில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்போதுதான் அங்கு 16 மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் படுத்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பாம்பின் உடலை கிழித்து பார்க்கையில் ஃபரிதாவின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று இந்தோனேசிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post இதென்ன நாக தோஷமா? இந்தோனேசியாவில் மனிதர்களை விழுங்கும் மலைப்பாம்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

