சினிமா மாடலாகவும், ரியாலிட்டி ஷோக்களின் மூலம் பிரபலமாகவும் இருக்கும் நடிகை உர்பி ஜாவேத், வித்தியாசமான ஆடைகள் மற்றும் அணிகலன்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டில் நள்ளிரவில் இரண்டு மர்ம நபர்கள் நுழைய முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, சில தினங்களுக்கு முன் அதிகாலை 3.30 மணியளவில், அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் அவரது வீட்டு வாசலில் சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து அழைப்பு மணியை அடித்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதே நேரத்தில், மேலும் இரண்டு நபர்கள் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உர்பி ஜாவேத் கூறுகையில், “நள்ளிரவில் தொடர்ந்து மணி அடித்ததால் வெளியே சென்று பார்த்தேன். அப்போது வெளியில் இருந்த நபர் கதவைத் திறந்து உள்ளே அனுப்புமாறு வற்புறுத்தினார். வெளியேறச் சொன்னபோதும் அவர் மறுத்தார். அதனைத் தொடர்ந்து போலீசை அழைத்தேன். போலீசார் வந்தபோதும், அந்த மர்ம நபர்கள் தவறாக நடந்து கொண்டனர். வெளியே செல்லுமாறு கூறியும் அவர்கள் மறுத்தனர். பின்னர் போலீசார் ஒரு வழியாக அவர்களை வெளியேற்றினர்” என்றார்.
மேலும், “அதிகாலை 3 மணிக்கு வீட்டின் வெளியே நின்று, ஒரு பெண்ணை கதவைத் திறக்க சொல்லி விட்டு வெளியேற மறுப்பது மிகவும் பயங்கரமான அனுபவம். பெண்கள் தனியாக இருக்கும் போது இத்தகைய சூழ்நிலைகள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.




