கேரளாவில் 45 ஆண்டுகாலம் இடதுசாரிகள் வசம் இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல்முறையாக பாஜக கைப்பற்றியுள்ளது.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. கேரளாவில் 6 மாநகராட்சிகள், 86 நகராட்சிகள், 14 மாவட்ட ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராம ஊராட்சிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்டமாக, கடந்த 9 ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் 75 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், 14 மாவட்டங்களில் உள்ள 244 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும், ஆளும் இடதுசாரிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மாநகராட்சியில் காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களையும், இடதுசாரிகள் 1 இடத்தையும் கைப்பற்றின.
திருவனந்தபுரத்தில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜக 50 வார்டுகளிலும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 29 வார்டுகளிலும், காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜகவின் வெற்றி கேரள அரசியலில் புதிய அத்தியாயம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் நடவடிக்கைகளால் சலிப்படைந்த மக்கள் நல்லாட்சியை வழங்க தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்வு செய்திருப்பதாகவும், வளர்ச்சியடைந்த கேரளாவை உருவாக்க வேண்டும் என வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திருவனந்தபுரத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது என பாராட்டு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், தலைநகரில் பாஜக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கூட்டணி அதிகளவில் வெற்றிபெற்றுள்ள நிலையில், இது ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி எனவும் சசி தரூர் கூறியுள்ளார். சசி தரூர் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

